IPL TAMIL
கடைசி நான்கு- ஐந்து ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய நினைக்கலாம்,,. ஆனால்… டோனிக்கு கவாஸ்கர் அறிவுரை
சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 188 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்கள் ருத்துராஜ் (5), டு பிளிஸ்சிஸ் (0) சொதப்பினாலும் மொயீன் அலி (36), ரெய்னா (54), அம்பதி ராயுடு (23), ஜடேஜா (26), சாம் கர்ரன் (34) சிறப்பாக பேட்டிங் செய்தனர். டோனி டக்அவுட்டில் வெளியேறினார்.
சிஎஸ்கே 13.5 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது விக்கெட்டாக அம்பதி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்து டோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜடேஜா களம் இறக்கப்பட்டார். டோனி 7-வது வீரராக 16-வது ஓவரிலேயே களம் இறங்கினார்.
எம்எஸ் டோனி 7-வது வீரராக களம் இறங்கியது குறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி அவரது பேட்டிங் ஆர்டர் குறித்து சில முடிவகளை எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் 7-வது இடத்தில் களம் இறங்கினார். நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வேண்டும் என அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம்.
ஆனால், அவர் அணியை கூடுதலாக வழி நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சென்னை அணியில் இளைஞர்கள் உள்ளனர். சில மிகவும் இளைஞர்கள். சாம் கர்ரன் கூட வயது மூத்தோர் கிடையாது. ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியை போன்று 3 அல்லது 4-வது இடத்தில் கூட களம் இறக்க பார்க்கலாம்.
ஆனால், எம்எஸ் டோனி பேட்டிங் ஆர்டரில் கொஞ்சம் முன்னதாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால், போட்டியை அவரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். டெல்லிக்கு எதிரான 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். இது எல்லோருக்கும் நடப்பதுதான். ஐபிஎல் தொடரில் அவர் முன்னதாக களம் இறங்க வேண்டும். ஐந்து அல்லது 6-வது இடங்களில் களம் இறங்க வேண்டும்’’ என்றார்.