IPL TAMILNEWSTAMIL

பிரித்வி ஷா ருத்ர தாண்டவம் – கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

பிரித்வி ஷா சிக்சர், பவுண்டரிகளாக விளாசி தள்ள, ஷிகர் தவான் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 25-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

ராணா 15 ரன்னிலும், ராகுல் திரிபாதி 19 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய கேப்டன் இயன் மோர்கன், சுனில் நரைனும் டக் அவுட்டாகினர்.

தொடர்ந்து களமிறங்கிய ஆந்தரே ரசல், துவக்க வீரர் ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷுப்மான் கில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதிரடி காட்டிய ரசல் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 27 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் அக்சர் பட்டேல், லலித் யாதவ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

 

132 ரன்கள் சேர்த்த பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி

 

பிரித்வி ஷா தொடக்கம் முதல் ஓவரில் இருந்தே விளாசினார். அவருக்கு ஷிகர் தவான் பக்கபலமாக இருந்தார். அதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா அரை சதமடித்தார்.
அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் 46 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர்.

41 பந்தில் 82 ரன்கள் குவித்த நிலையில் பிரித்வி ஷா அவுட்டானார். அடுத்து இறங்கிய பண்ட் 8 பந்தில் 16 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், டெல்லி அணி 16.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது டெல்லி அணி பெற்ற 5வ்து வெற்றி ஆகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பிரித்வி ஷாவுக்கு வழங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker