IPL TAMILTAMIL

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை: ‘அனுபவ வீரர்களால் வெற்றி பெற்றோம்’டோனி மகிழ்ச்சி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

இதில் மும்பை அணி நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 6 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்த போதிலும் அம்பத்தி ராயுடு (71 ரன், 6 பவுண்டரி, 3 சிக்சர்), பாப் டு பிளிஸ்சிஸ் (58 ரன்) ஆகியோரின் அபார அரைசதத்தால் 19.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து வெற்றி கண்டது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி ருசித்த 100-வது வெற்றி இதுவாகும்.

இந்த உற்சாகத்தோடு டோனி கூறியதாவது:-

நாம் போதுமான பயிற்சி எடுத்திருக்கலாம்.

ஆனால் களம் இறங்கும் போது ஆடுகளத்தன்மை மற்றும் சூழ்நிலையை நன்கு கணித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.

இந்த ஆடுகளத்தில் எந்த மாதிரி பந்து வீசினால் நன்றாக இருக்கும் என்பதை கணிக்க நேரம் எடுத்துக் கொண்டோம்.

இந்த ஆட்டத்தின் மூலம் நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனாலும் இன்னும் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது.

2-வது பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு ஏற்படும் வரை பந்து ‘ஸ்விங்’ ஆகும் என்பதை உணர வேண்டும்.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் தக்க வைத்திருந்தால் நமது கை ஓங்கும்.

இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.

பிளிஸ்சிஸ் உடன் அம்பத்தி ராயுடுவின் பார்ட்னர்ஷிப் அருமை.

எங்கள் அணியில் பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.

இத்தகைய நெருக்கடியான சூழலில் அனுபவம் எங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

அது பற்றி தான் ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். நிறைய போட்டிகளில் விளையாடினால் தான் அனுபவம் கிடைக்கும்.

300 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எல்லோருக்கும் பெரிய கனவு.

எப்போதும் களம் இறங்கும்போது இளமையும், அனுபவமும் கலந்த அணியாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

களத்திலும், வெளியிலும் இளம் வீரர்களை அனுபவ வீரர்கள் வழிநடத்த வேண்டும்.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள மூத்த வீரர்களுடன் 60-70 நாட்கள் பழகும் வாய்ப்பு இளம் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரனை முன்கூட்டியே களம் இறக்கியது குறித்து கேட்கிறீர்கள்.

அந்த சமயம் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை கொஞ்சம் அச்சுறுத்தும் முயற்சியாக ஜடேஜா, கர்ரனை முன்வரிசையில் பயன்படுத்தினோம்.

இவர்கள் ஒன்றிரண்டு சிக்சர் அடித்தால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடும். இது உளவியல் ரீதியான ஒரு யுக்தி.

அதற்கு பலனும் கிட்டியது.

இவ்வாறு டோனி கூறினார்.

ரோகித் சொல்வது என்ன?

நடப்பு சாம்பியன் மும்பை அணி 2013-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல்.-ல் தங்களது தொடக்க ஆட்டத்தில் ஜெயித்ததில்லை. அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது.

மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘சிறப்பான தொடக்கம் கிடைத்தும், மற்ற பேட்ஸ்மேன்கள் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முன்னெடுத்து செல்லவில்லை.

சென்னை அணிக்காக ராயுடு, பிளிஸ்சிஸ் செய்தது போன்று நாங்கள் செய்ய தவறி விட்டோம்.

முதல் 10 ஓவர்களில் 85 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தோம்.

இறுதிகட்டத்தில் சென்னை பவுலர்கள் எங்களை கட்டுப்படுத்தி விட்டனர்.

எல்லா சிறப்பும் அந்த அணி பவுலர்களையே சாரும். ஆட்டத்தில் சில தவறுகளை செய்து விட்டோம்.

அடுத்த ஆட்டத்தில் அதை திருத்திக் கொள்வோம் என்று நம்புகிறேன். ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்’ என்றார்.

6 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 18 ரன்கள் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு உதவிய சென்னை வீரர் சாம் கர்ரன் கூறுகையில், ‘இங்கிலாந்தில் இருந்து அமீரகம் வந்தடைந்ததும் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

அணியின் பல வீரர்களை சந்திக்கவே இல்லை. உடனடியாக களம் இறங்க வேண்டியதாகி விட்டது.

ஜடேஜா ஆட்டம் இழந்ததும் டோனிக்கு முன்பாக என்னை பேட்டிங் செய்ய வைத்தது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 18-வது ஓவரில் அடித்து நொறுக்க வேண்டும் என்று இலக்காக வைத்திருந்தோம்.

பந்தை சிக்சருக்கு விரட்ட வேண்டும் அல்லது அவுட் ஆக வேண்டும் என்ற மனநிலையுடன் ஆடினேன்.

சில நேரம் நமது திட்டம் நிறைவேறும். சில நேரம் கைகொடுக்காது’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker