IPL TAMIL
ஐ.பி.எல் வரலாற்றில் மறக்க முடியாத சாதனை துளிகள்..!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம், ஓர் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் நீடிக்கிறார். இச்சாதனைகள் நடப்புத் தொடரில் முறியடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள மாணவர்கள், இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஐபிஎல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிரடி வானவேடிக்கைக்கு பேர் போன ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
ஆனால், ஒருசில சாதனைகள் பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளன. அதில், குறிப்பாக அதிவேக சதம்… 2013-ல் பெங்களூரு அணிக்காக ஆடிய கிறிஸ் கெய்ல், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதம் விளாசினார்.
இதே போட்டியில், ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார் கிறிஸ் கெய்ல். இதுவே, ஓர் இன்னிங்சில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்களாகும். மேலும், இப்போட்டில் 17 சிக்சர்களை கிறிஸ் கெய்ல் பறக்கவிட்டார். இதுவும், ஓர் இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்கள் சாதனையில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2018 தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய லோகேஷ் ராகுல், டெல்லிக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் விளாசினார். இது அதிவேக அரைசதமாக உள்ளது.
அத்துடன், ஓர் இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் அல்சாரி ஜோசப் முதலிடம் வகிக்கிறார். இவர், கடந்த ஆண்டு மும்பை அணிக்காக ஆடிய போது, ஐதராபாத் அணிக்கு எதிராக 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார்.பேட்டிங், பந்துவீச்சில் ஒவ்வோர் ஆண்டும் புது புது சாதனைகள் நிகழ்த்தப்படும் நிலையில்… நடப்பு 2020 தொடரில் இச்சாதனைகள் முறியடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.