IPL TAMILTAMIL

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி போராடி தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிறிய மைதானம், பேட்டிங்குக்கு சொர்க்கமான இந்த ஆடுகளத்தில் எதிர்பார்த்தபடியே டெல்லி வீரர்கள் ரன்வேட்டை நடத்தினர்.

ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் திரட்டினர். தவான் 26 ரன்களில் (2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் கொல்கத்தாவின் பந்து வீச்சை வெளுத்துகட்டினார்.

கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, நாகர்கோட்டி என்று எந்த பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை.

இதனால் ரன்ரேட் 10-க்கும் மேலாக எகிறியது.

அணியின் ஸ்கோர் 129 ரன்களாக உயர்ந்த போது பிரித்வி ஷா 66 ரன்களில் (41 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆனார்.

தொடர்ந்து இறங்கிய ரிஷாப் பண்டும் அதிரடி காட்ட டெல்லி அணி சுலபமாக 200 ரன்களை தாண்டியது.

ரிஷாப் பண்ட் 38 ரன்களும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்டோனிஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

சதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு அந்த மைல்கல்லை எட்ட கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக இறுதி ஓவரை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்ரேயாஸ் அய்யர் 88 ரன்களுடன் (38 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது.

சுனில் நரின் 3 ரன்னிலும், சுப்மான் கில் 28 ரன்னிலும் அவுட் ஆனார்கள். முன்வரிசையில் இறக்கப்பட்ட ஆந்த்ரே ரஸ்செல் (13 ரன்) கைகொடுக்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் (6 ரன்) மோசமான பார்ம் தொடருகிறது.

நெருக்கடிக்கு இடையே நிதிஷ் ராணா மிரட்டினார். 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் (35 பந்து) சேகரித்த அவர் பந்தை சிக்சருக்கு விரட்ட முயற்சித்து கேட்ச் ஆனார்.

இதனால் ஆட்டம் படிப்படியாக டெல்லியின் பக்கம் நகர்ந்தது.

இந்த சமயத்தில் 17-வது ஓவரை வீசிய ஸ்டோனிசின் பந்து வீச்சில் ராகுல் திரிபாதி 3 சிக்சரும், ரபடாவின் அடுத்த ஓவரில் இயான் மோர்கன் ‘ஹாட்ரிக்’ சிக்சரும் பறக்க விட ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.

ஆனால் வெற்றிக்கு 10 பந்துகளில் 29 ரன்கள் தேவையாக இருந்த முக்கியமான கட்டத்தில் மோர்கன் (44 ரன், 18 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார்.

அதன் பிறகே டெல்லி வீரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டது.

பரபரப்பான கடைசி ஓவரை ஸ்டோனிஸ் வீசினார். இதில் முதல் பந்தில் பவுண்டரிக்கு ஓடவிட்ட திரிபாதி (36 ரன், 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த பந்தில் கிளீன் போல்டு ஆனார்.

அத்துடன் அவர்களின் நம்பிக்கையும் கரைந்தது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது.

இதன் மூலம் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

டெல்லி தரப்பில் நார்ஜே 3 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

காயத்தில் இருந்து மீண்டு வந்த அஸ்வினுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker