CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜனுக்கு இங்கிலாந்து வீரர்கள் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தமிழக வேகப்பந்து வீரர் நடராஜன் முக்கிய பங்கு வகித்தார்.
கடைசி ஓவரை அவர் சிறப்பாக வீசியதால் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் சாம்கரண் விளையாடினார். அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த ஓவரில் சாம்கரண் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
இதையொட்டி நடராஜனுக்கு பாராட்டுகள் குவிகிறது. கேப்டன் விராட் கோலி கூறும்போது, ‘‘கடைசி ஓவர்களை ஹர்திக்பாண்ட்யாவும், நடராஜனும் சிறப்பாக வீசினார்கள்’’ என்றார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-
யார்க்கர் பந்து வீச்சு என்பது அழிந்து வருகிறது. உலகம் முழுக்க நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் யார்க்கர் பந்துவீச்சை, பவுலர்கள் சுலபமாக வீசுவார்கள் என நினைப்பீர்கள். இப்போது அதை துல்லியமாக வீசுவது கடினமானது. சரியாக வீசாவிட்டால், பந்து சிக்சருக்கு பறக்கும்.
பதட்டமான தருணத்தில் நடராஜன் சிறப்பாக பந்து வீசினார். சாம்கரண் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசப்பட்டது. லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கும் ஆட்டத்தில் நடராஜனின் இதயத்துடிப்பு எப்படி இருந்திருக்கும்? துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசிய அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைசிவரை இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக போராடிய சாம்கரண் கூறும்போது, ‘‘கடைசி ஓவரை நடராஜன் சிறப்பாக வீசினார். அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார்’’ என்றார்.
இதேபோல சமூக வலை தளங்களிலும் நடராஜனுக்கு பாராட்டுகள் குவிகிறது.