8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் துபாயில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மல்லுகட்டின.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவையொட்டி இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.
பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்லுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதன்படி கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். மிதமான வேகத்தில் ரன்களை திரட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் (7 ஓவர்) எடுத்து பிரிந்தனர்.
மயங்க் அகர்வால் (26 ரன்), யுஸ்வேந்திர சாஹல் வீசிய ‘கூக்ளி’ வகை பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து வந்து தடுமாற்றத்துடன் ஆடிய நிகோலஸ் பூரன் 17 ரன்னிலும் (18 பந்து), மேக்ஸ்வெல் 5 ரன்னிலும் வெளியேறினர்.
மறுமுனையில் கேப்டன் லோகேஷ் ராகுல் நிலைத்து நின்று விளையாடி அணியை நிமிர வைத்தார்.
ஆரம்பத்தில் பவுண்டரிகள் விரட்டுவதில் கவனம் செலுத்திய அவர் கடைசி கட்டத்தில் சிக்சர் மழை பொழிந்து ருத்ரதாண்டவமாடினார்.
83 மற்றும் 89 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ராகுல், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினின் ஒரே ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி நொறுக்கினார்.
அத்துடன் சதத்தையும் எட்டினார்.
இந்த ஐ.பி.எல்.-ல் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
ஷிவம் துபேயின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, இரு சிக்சர்களை தெறிக்கவிட்டு 200 ரன்களை கடக்க வைத்தார்.
ஒரு கட்டத்தில் 180 ரன்கள் வரை தொடும் என்று கணிக்கப்பட்ட நிலையில் கடைசி 4 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்ததால் ஸ்கோர் எதிர்பார்ப்பையும் மிஞ்சி எகிறியது.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.
லோகேஷ் ராகுல் 132 ரன்களுடனும் (69 பந்து, 14 பவுண்டரி, 7 சிக்சர்), கருண் நாயர் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
பின்னர் 207 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி நெருக்கடியில் சிக்கி விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது.
தேவ்தத் படிக்கல் (1 ரன்), ஜோஷ் பிலிப் (0), கேப்டன் விராட் கோலி (1 ரன்), ஆரோன் பிஞ்ச் (20 ரன்), டிவில்லியர்ஸ் (28 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் வரிசையாக நடையை கட்டியதும் அந்த அணி முற்றிலும் சீர்குலைந்தது.
17 ஓவர்களில் அந்த அணி 109 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், காட்ரெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 2-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும்.
தனது முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது. அதே சமயம் 2-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூருவுக்கு இது முதல் தோல்வியாகும்.