TAMIL
20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு பின்னடைவு
இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவில் 20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன், பவுலர்கள்,
ஆல்-ரவுண்டர்கள் ஆகியோரின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (879 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் (823) 2-வது இடத்தில் தொடருகிறார்.
3 முதல் 8 வரையிலான இடங்களில் முறையே ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), காலின் முன்ரோ (நியூசிலாந்து), மேக்ஸ்வெல்
(ஆஸ்திரேலியா), டேவிட் மாலன் (இங்கிலாந்து), இவின் லீவிஸ் (வெஸ்ட்இண்டீஸ்), ஹசரத்துல்லா (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி தொடரில் 136 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் 2 இடம் ஏற்றம் கண்டு 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (673) ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தையும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு இடம் பின்தங்கி 11-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (749 ரன்கள்) முதலிடத்தில் தொடருகிறார்.
முஜீப் உர் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) 2-வது இடத்திலும், மிட்செல் சான்ட்னெர் (நியூசிலாந்து) 3-வது இடத்திலும், ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா) 4-வது இடத்திலும், இமாத் வாசிம் (பாகிஸ்தான்) 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
பெலக்வாயோ (தென்ஆப்பிரிக்கா), அடில் ரஷித் (இங்கிலாந்து) கூட்டாக 6-வது இடம் வகிக்கின்றனர்.
தப்ரைஸ் ஷம்சி (தென்ஆப்பிரிக்கா) 8-வது இடத்திலும், ஷதப்கான் (பாகிஸ்தான்) 9-வது இடத்திலும், ஆஷ்டன் அகர் (ஆஸ்திரேலியா) 10-வது இடத்திலும் தொடருகின்றனர்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் முகமது நபி (ஆப்கானிஸ்தான்) முதலிடத்தில் நீடிக்கிறார்.