CRICKETLATEST UPDATESNEWSTAMIL

கடைசி 3 டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவார் – கோலி நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதலாவது டெஸ்டுடன் நான் தாயகம் திரும்பிய பிறகு எஞ்சிய 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட இருக்கும் அஜிங்யா ரஹானேவுடன் எனக்கு நல்ல புரிதல் உள்ளது. இருவரும் இணைந்து பேட்டிங்கில் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடி இருக்கிறோம். அது அணிக்கு தேவையான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையிலானது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் கேப்டனாக ரஹானே சிறப்பாக பணியாற்றினார். பார்க்க மிகவும் அமைதியாக தெரிவார். ஆனால் அணியின் வலிமை என்ன? ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நாங்கள் எப்போதும் ஒரு அணியாக கூட்டு முயற்சியை வெளிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஆடுகிறோம். தனிப்பட்ட வீரரை சார்ந்து இருந்ததில்லை. நான் இல்லாத சமயத்தில் அவர் அணியை திறம்பட வழிநடத்துவார். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அருமையாக செயல்படுவார் என்று நம்புகிறேன். 

சமீபத்திய ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடுகிறேன். கிரிக்கெட் ஆடுவதற்கு அற்புதமான ஒரு இடம் ஆஸ்திரேலியா. இங்கு நீங்கள் சிறப்பாக செயல்படும் போது அதற்குரிய மரியாதையை மக்கள் தருவார்கள். அவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும்.

இவ்வாறு கோலி கூறினார்.

‘விராட் கோலி ஆஸ்திரேலியா அல்லாத ஒரு ஆஸ்திரேலியர். அதாவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கான அனைத்து பண்புகளையும் கொண்டவர்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் கூறியிருந்தார். இது பற்றி கோலியிடம் கேட்ட போது, ‘நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஆளுமை, குணாதிசயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் என்னை புதிய இந்தியாவின் பிரதிநிதியாக நினைக்கிறேன். புதிய இந்தியாவின் பிரதிநிதியாக சவால்களை எடுத்துக் கொண்டு, நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். எங்கள் வழியில் வரும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதிசெய்கிறோம்.’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘இந்திய வீரர்களை வம்புக்கு இழுக்க வேண்டும் அல்லது அதீத ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் செல்ல மாட்டோம். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் எங்களது வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். அது தான் எங்களது நோக்கம். அதே சமயம் களத்தில் வாக்குவாதம் பிரச்சினை நிகழ்ந்தால் நாங்கள் பின்வாங்கமாட்டோம். இந்த தொடர் முடிந்த பிறகு கேப்டன்ஷிப்பில் எனது எதிர்காலம் குறித்து பயிற்சியாளருடன் ஆலோசித்து முடிவு செய்வேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker