TAMIL

20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது – மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள்

16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க செப்டம்பர் மாதம் வரை ஆஸ்திரேலிய எல்லைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருப்பதால், இந்த 20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடப்படலாம் என்று கூறப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

வருகிற 28-ந்தேதி நடைபெறும் ஐ.சி.சி. நிர்வாகிகள் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், தேர்வு குழு தலைவருமான மிஸ்பா உல்-ஹக் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

16 அணிகள் கலந்து கொள்ளும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.

இந்த போட்டி குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஒரு மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ பொறுத்து இருந்து பார்த்து எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் அவசர கோலத்தில் முடிவு எடுக்கக்கூடாது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை பார்க்க எல்லோரும் விரும்புகிறார்கள்.

சர்வதேச அளவிலான போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கு இந்த உலக கோப்பை போட்டி சிறப்பான வாய்ப்பாக இருக்கும்.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர்.

விளையாட்டுகள் நடைபெறாததால் மக்களுக்கு பொழுதுபோக்கு எதுவும் இல்லை.

இந்த நிலையை கடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே நாங்கள் ஜூலை மாதம் தொடங்கும் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை வீரர்கள் பின்பற்றுவது என்பது எளிதான காரியமல்ல.

பாகிஸ்தானில் 3 வாரம் பயிற்சி மற்றும் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சி மேற்கொண்டால் இங்கிலாந்து தொடருக்கு தயாராகி விடலாம் என்று நினைக்கிறேன்.

இங்கிலாந்து பயணத்துக்கு 25 முதல் 27 வீரர்கள் செல்லலாம் என்று நினைக்கிறோம்.

ஏனெனில் இடையில் மாற்று வீரர் கேட்க முடியாது.

அத்துடன் வீரர்கள் அனைவரும் தொடக்கம் முதல் முடிவு வரை ஒன்றாக இருப்பதால் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை.

இங்கிலாந்து தொடரில் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது 2-வது விக்கெட் கீப்பராக இடம் பெறுவார்.

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆட்ட தரத்தில் விராட்கோலி (இந்தியா), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜோரூட் (இங்கிலாந்து) ஆகியோருக்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளார்.

20 ஓவர் கேப்டன் பொறுப்பிலும் பாபர் அசாம் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker