MORETAMIL

மியாமி ஓபன் டென்னிஸ் : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் ‘சாம்பியன்’

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான ஆஷ்லி பார்ட்டியும் (ஆஸ்திரேலியா), 9-ம் நிலை வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ்குவும் (கனடா) மோதினர். முதல் 3 கேம்களை பார்ட்டி வெல்ல அடுத்த 2 கேம்களை பியான்கா வசப்படுத்தினார். ஆனால் அதன் பிறகு ஆஷ்லி பார்ட்டியின் ஆக்ரோஷமான ஷாட்டுகளுக்கும், சக்திவாய்ந்த சர்வீஸ்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பியான்கா திணறினார். தொடர்ச்சியாக கேம்களை தனதாக்கி முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய, ஆஷ்லி பார்ட்டி 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

 

2-வது செட்டில் 2-வது கேமின் போது பந்தை திருப்பி அடிக்க ஓடும் போது பியான்கா மைதானத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது வலது கால் வேகமாக மடங்கியதில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர் காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடினார். ஆனாலும் அவரால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 2-வது செட்டில் பியான்கா 0-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது கண்ணீர் மல்க போட்டியை விட்டு விலகினார். இதையடுத்து ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.

35 ஆண்டு கால மியாமி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் அடுத்தடுத்து பட்டத்தை வென்ற 6-வது வீராங்கனை என்ற சிறப்பை ஆஷ்லி பார்ட்டி பெற்றார். இதற்கு முன்பு ஸ்டெபி கிராப் (ஜெர்மனி), மோனிகா செலஸ் (அமெரிக்கா), சாஞ்சஸ் விகாரியா (ஸ்பெயின்), வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்றவர்கள் ஆவர்.

வாகை சூடிய 24 வயதான ஆஷ்லி பார்ட்டிக்கு ரூ.2 கோடி பரிசும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. 2019-ம் ஆண்டில் அவர் இங்கு பட்டம் (2020-ம் ஆண்டு போட்டி கொரோனாவால் ரத்து) வென்ற போது ரூ.10 கோடியை பரிசாக அள்ளினார். ஆனால் கொரோனா பாதிப்பு, மிக குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் அனுமதி போன்ற காரணங்களால் இந்த முறை பரிசுத்தொகை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. பியான்கா ரூ.1¼ கோடியை பரிசாக பெற்றார். இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் பியான்கா 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடிக்கிறார்.

24 வயதான ஆஷ்லி பார்ட்டி கூறுகையில், ‘இறுதிப்போட்டி இந்த மாதிரி முடிவதை நான் ஒரு போதும் விரும்புவதில்லை. பியான்காவுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். மியாமி பட்டத்தை தக்க வைத்துக்கொண்ட ஜாம்பவான்கள் வரிசையில் நானும் இடம் பிடித்திருப்பதை கவுரவமாக கருதுகிறேன். தரவரிசையில் எனது நம்பர் ஒன் இடம் குறித்து நிறைய விவாதிக்கப்படுவதை அறிவேன். ஆனால் கடந்த ஆண்டில் நான் எல்லா போட்டிகளிலும் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் எனது புள்ளிகளிலும் முன்னேற்றம் காண முடியவில்லை. அதே சமயம் புள்ளிகளையும் இழக்கவில்லை. என்னை பொறுத்தவரை நான் நம்பர் ஒன் இடத்துக்கு தகுதியானவள் தான் ’ என்றார்.

2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை ருசித்தவரான 20 வயதான பியான்கா அதன் பிறகு கால்முட்டி காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்டார்.

இப்போது அவர் மீண்டும் காயத்தில் சிக்கியிருக்கிறார். அவர் கூறுகையில், ‘கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு வந்து இந்த அளவுக்கு விளையாடியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இறுதிப்போட்டியில் பாதியில் விலகுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இது மாதிரி நடப்பது சகஜம். எனது டென்னிஸ் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறி செல்வதை எதிர்நோக்குகிறேன். எனது வயது வெறும் 20 தான். அதனால் இப்போதைக்கு எந்த ரிஸ்க்கும் எடுக்க முயற்சிக்கமாட்டேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker