TAMIL

பாகிஸ்தான் 302 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ – யாசிர் ஷா சதம் அடித்தார்

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி வார்னரின் முச்சதத்தின் உதவியுடன் 3 விக்கெட்டுக்கு 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 96 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. பாபர் அசாம் 43 ரன்னுடனும், யாசிர் ஷா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



இந்த நிலையில் 3-வது நாளான நேற்று மேற்கொண்டு 293 ரன்கள் (மொத்தம் 389 ரன்) சேர்த்தால் மட்டுமே பாலோ-ஆன் ஆபத்தை தவிர்க்க முடியும் என்ற நெருக்கடியுடன் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது. பாபர் அசாமும், யாசிர் ஷாவும் மேற்கொண்டு 2 மணி நேரம் தாக்குப்பிடித்து ஆடினர்.

சதத்தை நோக்கி பயணித்த பாபர் அசாம் துரதிர்ஷ்டவசமாக 97 ரன்களில் (132 பந்து, 11 பவுண்டரி) மிட்செல் ஸ்டார்க் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் சிக்கினார். அப்போது அந்த அணியின் ஸ்கோர் 194 ரன்களாக இருந்தது. இதனால் சிறிது நேரத்தில் இன்னிங்ஸ் முடிந்து விடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாசிர் ஷா, பிங்க் நிற பந்து வீச்சு தாக்குதலை திறம்பட சமாளித்து அசத்தினார். சுழற்பந்து வீச்சில் தாராளம் காட்டி செஞ்சுரி (32 ஓவரில் 197 ரன்கள் விட்டுக்கொடுத்தார்) போட்ட அவர் தனது பேட்டிங்கிலும் செஞ்சுரி அடித்து ஆச்சரியப்படுத்தினார். சர்வதேச போட்டி மட்டுமல்ல, முதல்தர போட்டிகளிலும் அவரது முதல் சதம் இது தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2006-ம் ஆண்டுக்கு பிறகு பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் கண்டு சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் 33 வயதான யாசிர் ஷா பெற்றார்.

யாசிர் ஷா கடைசி விக்கெட்டாக 113 ரன்களில் (213 பந்து, 13 பவுண்டரி) கேட்ச் ஆனார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த முகமது அப்பாஸ் 29 ரன் எடுத்தார். முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 94.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின்னர் பாலோ-ஆன் வழங்கிய ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடும்படி பாகிஸ்தானை பணித்தது. இதன்படி 287 ரன்கள் பின்தங்கிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சிலும் தகிடுதத்தம் போட்டது. இமாம் உல்-ஹக் (0), கேப்டன் அசார் அலி (9 ரன்), பாபர் அசாம் (8 ரன்) ஆகியோர் வரிசையாக ஆஸ்திரேலியாவின் புயல்வேகத்துக்கு இரையானார்கள்.

16.5 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 39 ரன்களுடன் பரிதவித்துக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் அணி இன்னும் 248 ரன்கள் பின்தங்கி இருப்பதால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. மழை பாதிப்பை கருத்தில் கொண்டு இன்றைய 4-வது நாள் ஆட்டம் அரைமணி நேரத்துக்கு முன்னதாக இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker