TAMIL
சைமண்ட்சை, ஹர்பஜன் சிங் திட்டிய விவகாரம்: இனவெறி சர்ச்சை எனது கேப்டன்ஷிப்பில் மோசமான தருணம் – ரிக்கி பாண்டிங் வருத்தம்

அனில் கும்பிளே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியது.
இதில் சிட்னியில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் சைமண்ட்சை ‘குரங்கு’ என்று திட்டியதாக எழுந்த சர்ச்சை இனவெறி பிரச்சினையாக உருவெடுத்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், ஹர்பஜன் சிங் 3 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தார்.
இதனால் கோபமடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் எஞ்சிய போட்டி தொடரில் விளையாடாமல் நாடு திரும்பப்போவதாக எச்சரிக்கை விடுத்தது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டது.
ஹர்பஜன் சிங்குக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீலை விசாரித்த கமிஷனர் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.
இதனால் ஹர்பஜன் சிங் தண்டனையில் இருந்து தப்பினார்.
இதன் காரணமாக சமரசம் அடைந்த இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. இந்த தொடரை அஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கேப்டன்ஷிப்பில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து அளித்த ஒரு பேட்டியில், ‘சைமண்ட்சை குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதால் எழுந்த இனவெறி சர்ச்சை எனது கேப்டன்ஷிப்பில் மிகவும் மோசமான தருணமாகும்.
கடந்த 2005-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். இருப்பினும் அந்த போட்டி தொடர் எனது கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால் குரங்கு சர்ச்சை விவகாரத்தில் என்னால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அது ஒரு மோசமான தருணம். அந்த சம்பவம் குறித்து நீண்ட நாட்களுக்கு பேசப்பட்டது.
இந்த பிரச்சினை காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்து பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் முடிவில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். அந்த தோல்விக்கு பிறகு சில நாட்கள் இன்னும் மோசமாகி கொண்டே போனது.
2005-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை எளிதில் முழுமையாக வெல்வோம் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை.
அந்த தொடரை (1-2) இழந்தது கடினமான நிகழ்வாகும்.
2010-11-ம் ஆண்டில் கண்ட ஆஷஸ் தோல்வி பெரிய அளவில் பாதிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.
ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 77 டெஸ்ட் போட்டியில் விளையாடி 48-ல் வெற்றியும், 228 ஒருநாள் போட்டியில் ஆடி 164-ல் வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.