TAMIL

இலங்கையில் பயணம் செய்து விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயார்: வாரிய நிர்வாகி தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியும் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் கள் அனைவரும் வீட்டிலேயே தங்கள் பொழுதை கழித்து வருகிறார்கள்.

வெளியில் சென்று பயிற்சி எதுவும் எடுக்க முடியாத நிலை இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் உடற்தகுதி நிபுணரின் அறிவுரையின்படி வீரர்கள் வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

மீண்டும் களம் திரும்புவது எப்போது? என்ற ஆவலுடன் வீரர் கள் காத்து இருக்கிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி அட்டவணையின் படி இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட வேண்டும்.

கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால் இலங்கை பயணம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் இருந்து வருகிறது.

இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் சமீபத்தில் கடிதம் எழுதப்பட்டது.

அதில் ‘தனிமைப்படுத்துதல் வழிமுறைகள் உள்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கவும், ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டி தொடரை நடத்தவும் தயாராக இருக்கிறோம்.

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இறுதியில் இலங்கை வந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட வேண்டும்‘ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சாதகமான பதிலை அளித்து இருக்கிறது. மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று விளையாட தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கருத்து தெரிவிக்கையில், ‘ஊரடங்கு தளர்வுகள் மற்றும் பயண கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியே இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்கும். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார விஷயத்தில் எந்தவித குறைபாடும் இல்லை என்றால் இலங்கை சென்று விளையாட இந்திய அணி தயார். வீரர்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்‘ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker