TAMIL

ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் இரட்டை சதம் அடித்து சாதனை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் தர்மசாலாவில் நேற்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் மும்பை-இமாச்சலபிரதேச அணிகள் மோதின.

டாஸ் வென்ற இமாச்சலபிரதேச அணி, மும்பையை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை அணி 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.


சர்ப்ராஸ் கானும், ஆதித்ய தாரேவும் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

நிலைத்து நின்று ஆடிய சர்ப்ராஸ் கான் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 214 ரன்களை எட்டிய நிலையில் ஆதித்ய தாரே (62 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார்.

போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்னதாக முடித்து கொள்ளப்பட்டது.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் சர்ப்ராஸ் கான் 226 ரன்களும், சுபாம் ரஞ்சன் 44 ரன்களும் எடுத்து களத்தில் இருக்கின்றனர்.

இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த சர்ப்ராஸ் கான், உத்தரபிரதேசத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 301 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.


முதல் தர போட்டியில் முச்சதம் மற்றும் இரட்டை சதத்தை அடுத்தடுத்த போட்டியில் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சர்ப்ராஸ் கான் பெற்றார்.

இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் இந்த சாதனையை செய்து இருந்தார்.

இந்தூரில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி, உத்தரபிரதேசத்தை எதிர்கொண்டது.

இதில் முதலில் ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 73 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்தது.

இதில் 7-வது ஓவரை வீசிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரவி யாதவ் 3-வது, 4-வது, மற்றும் 5-வது பந்துகளில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

இது அவருக்கு அறிமுக முதல் தர போட்டியாகும்.


இதன்மூலம் அறிமுக போட்டியில் தனது முதல் ஓவரிலேயே ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற அரிய சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்பு 1939-40-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க வீரர் ரைஸ் பிலிப்ஸ் முதல் தர போட்டியில் தான் வீசிய முதல் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார்.

ஆனால் அது அவருக்கு 5-வது போட்டியாகும். அதற்கு முந்தைய 4 போட்டிகளில் அவர் களமிறங்கினாலும் பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker