TAMIL

இங்கிலாந்து பெண்கள் அணி சூப்பர் ஓவரில் வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது

இந்தியா, இங்கிலாந்து, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.



லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் கான்பெர்ராவில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 78 ரன்னும் (45 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), பான் வில்சன் ஆட்டம் இழக்காமல் 39 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 157 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி பெத் மூனியின் அரைசதத்தின் (65 ரன்) உதவியுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 2 ரன் மட்டுமே எடுத்ததால், பரபரப்பான இந்த ஆட்டம் டையில் (சமன்) முடிந்தது.



கடந்த 4 நாட்களில் சமனில் முடிந்த 3-வது சர்வதேச ஆட்டம் இதுவாகும்.

ஆண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-நியூசிலாந்து மோதிய ஆட்டங்கள் அடுத்தடுத்து சமனில் முடிந்தது நினைவு கூரத்தக்கது.

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 ரன் எடுத்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 4 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் ஹீதர் நைட் 3-வது, 4-வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அசத்தியதுடன் ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.

கான்பெர்ராவில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.



இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker