TAMIL

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 6-ந் தேதியும், 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் 11-ந் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ந் தேதியும், 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் 18-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் 22-ந் தேதியும் நடக்கிறது.



வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கொல்கத்தாவில் கூடி அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இந்த ஆண்டில் 60 போட்டிகளில் (ஐ.பி.எல். உள்பட) விளையாடி இருக்கிறார். அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருடன் கலந்து பேசி ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது போல் ரோகித் சர்மாவுக்கு தேர்வு குழு ஓய்வு அளிக்கும் என்று தெரிகிறது.

ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஷிகர் தவானின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. வங்காளதேசத்துக்கு எதிரான தொடர் மற்றும் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியிலும் அவர் குறிப்பிடத்தக்க வகையில் செயல்படவில்லை. இதனால் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, புவனேஷ்வர்குமார் ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. எனவே அவர்கள் அணியில் இடம் பெறமாட்டார்கள். இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இடம் பிடித்த ஷிவம் துபே, ஷர்துல் தாகூர் அணியில் மீண்டும் இடம் பெறக்கூடும். வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்டுகளை அள்ளிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அணியில் தொடருவார். கலீல் அகமதுவுக்கு இடம் கிடைப்பது சந்தேகக் தான்.

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடைகிறது. இதனால் அவர் தலைமையில் தேர்வு செய்யப்படும் கடைசி அணி இதுவாக தான் இருக்கும். புதிய தேர்வு குழு தலைவர் யார்? என்பது அடுத்த மாதம் 1-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. புதிய தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான எல்.சிவராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker