TAMIL

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் நடைபெறும் – சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தகவல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.




பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை நிலவுவதாலும் இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் வற்புறுத்தியது.

இந்த நிலையில் பொதுவான இடத்தில் இந்த போட்டி வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. பாகிஸ்தானில் இருந்து போட்டியை மாற்றிய முடிவை எதிர்த்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் அப்பீலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தனிப்பட்ட தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் இடமாக கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தேர்வு செய்து அந்த தகவலை அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் போட்டி எங்கு நடைபெறும் என்று நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீசன் அலி அளித்த பேட்டியில், ‘கடும் குளிர் நிலவும் என்பதால் இந்த போட்டி உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படுகிறது. உள்விளையாட்டு அரங்கில் விளையாடுவது நமது வீரர்களுக்கு நன்கு பொருந்தும். எனவே இந்த ஆட்டம் நமக்கு அனுகூலமாக இருக்கும். சீதோஷ்ண நிலை கடினமாக இருப்பதுடன் உள்ளரங்கத்தில் விளையாடுவது வீரர்களின் உடல் நிலையை பாதிக்கும். அதே சமயம் உள்ளரங்க போட்டியில் ஆட்ட தரம் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் சூரிய ஒளி மற்றும் காற்றினால் போட்டியில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அணியாக பார்த்தால் இந்தியா தான் வலுவானதாகும். பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் எதுவும் நடக்கலாம். எந்தவொரு போட்டியிலும் எளிதாக வெற்றி கிடைத்து விடாது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நாட்டுக்காக விளையாடுவதால் வீரர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். எனவே நாம் சிறந்த வீரர்களை களம் இறக்க வேண்டும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker