TAMIL

வெஸ்ட் இண்டீசில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்த இங்கிலாந்துக்கு அழைப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருக்கிறது.

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 4-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.



இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும்.

ஆனால் கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த தொடர் திட்டமிட்டபடி தொடங்க வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரும் தள்ளிப்போகும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செப்டம்பர் மாதம் வரை மாற்று போட்டி அட்டவணையை உருவாக்கவும் வாய்ப்பில்லை.

வெஸ்ட் இண்டீசில்…

இந்த நிலையில் டெஸ்ட் தொடரை தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும்படி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.



கொரோனாவின் சீற்றம் வெஸ்ட் இண்டீசில் பெரிய அளவில் இல்லை. ஒரு சிலரே இந்த வைரசால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறுகையில், ‘இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசனிடம் கடந்த சில தினங்களில் இரண்டு முறை பேசியுள்ளேன்.

அப்போது அவரிடம் ‘சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், முடிந்த அளவுக்கு ஆதரவாக, உதவிகரமாக இருப்போம் என்று உறுதி அளித்தேன்.

மேலும் உங்களுக்கு சவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால், வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீசிலேயே நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினேன்.

பாரம்பரிய உறவு

தற்போதைய சூழலை நாங்கள் சாதகமாக எடுத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை.



கடினமான இந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் சமூகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கிரிக்கெட் உலகத்துக்கும், கரீபியன் தீவுக்கும் (வெஸ்ட் இண்டீஸ்) நீண்ட பாரம்பரிய உறவு உண்டு. அது மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

எல்லா வகையிலும் நாங்கள் உதவிகரம் நீட்ட தயார் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவுப்படுத்தி உள்ளோம்.

இதே போல் ஜூலை 30-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் எங்கள் நாட்டில் நடத்திக்கொள்ள முன்வந்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker