TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அசத்தல் வெற்றி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கியது.
ரோகித் சர்மா(7 ரன்கள்) இரண்டாவது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறியதை தொடர்ந்து, 3 வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.
நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை கோலி-ராகுல் ஜோடி நாலாபக்கமும் சிதறடித்தனர். இதற்கிடையில் நியூசிலாந்து அணி இரண்டு ரன் அவுட் வாய்ப்புகளையும், ஒரு கேட்ச் வாய்ப்பையும் நழுவவிட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கே.எல்.ராகுல் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) அரை சதத்தை கடந்தார். ஒருவழியாக 10வது ஓவரில் கே.எல்.ராகுல் அவுட்டானதையடுத்து இந்த ஜோடி பிரிந்தது.
அதனை தொடர்ந்து விராட் கோலி (45 ரன்கள், 32 பந்துகள்) கேட்ச் ஆகி வெளியேறினார். சிவம் துபே 13 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது.
மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் (3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) நிலைத்து நின்று ஆடி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.
இறுதியில் 20 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 204 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஸ்ரேயாஸ் ஐயர் (58 ரன்கள், 29 பந்துகள்) மற்றும் மனிஷ் பாண்டே (14 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.