டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை அணியில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் அரைசதம் அடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொல்கத்தா சார்பில் அந்த்ரே ரஸல் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரசித், ஷகிப், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களமிறங்கியது. நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஷுப்மான் கில் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதத்தை பதிவு செய்த நிதிஷ் ராணா 57 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக தினேஷ் கார்த்திக்கும், அந்த்ரே ரஸலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் தினேஷ் கார்த்திக் 8 (11) ரன்களும், ஹர்பஜன் சிங் 2 (2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. குறிப்பாக, 153 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அந்த கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற 30 பந்துகளில் 31 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற எளிமையான இலக்காகவே இருந்தது.
ஆனால், இறுதி 4 ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கத்தா அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அந்த அணியின் ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தின் தன்மை மாறியதால் 153 ரன்கள் என்ற இலக்கே மிகவும் கடினமானதாக மாறியுள்ளது. போட்டியில் கொல்கத்தா தோல்வியடைந்தது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஷாருக்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மிகவும் ஏமாற்றமளிக்கூடிய செயல்பாடு. குறைந்தபட்சமாக சொல்ல வேண்டுமென்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.