TAMIL

‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ – கேப்டன் விராட்கோலி கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்ட பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த டெஸ்ட் போட்டியில் ‘டாஸ்’ மிகவும் முக்கிய பங்கு வகித்தது.

‘டாசை’ இழந்தது நமக்கு பாதகமாக அமைந்தது. பேட்டிங்கில் நாம் சிறப்பாக செயல்படவில்லை.



எதிரணிக்கு சவால் அளிக்கும் வகையில் எங்கள் ஆட்டம் அமையவில்லை.

முதல் இன்னிங்சில் எதிரணி பவுலர்களுக்கு நாங்கள் போதிய நெருக்கடி அளித்ததாக நினைக்கவில்லை.

220-230 ரன்கள் எடுத்து இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும்.

மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதல் இன்னிங்சில் நாங்கள் பேட்டிங்கில் சந்தித்த பின்னடைவு சரிவில் இருந்து மீள முடியாத வகையில் செய்து விட்டது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கடைசி 3 வீரர்களின் பேட்டிங் எங்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றி விட்டது.

நியூசிலாந்து அணியின் முதல் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வரை பந்து வீச்சு நன்றாக இருந்தது.

எதிரணியின் முன்னிலையை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்த விரும்பினோம்.

ஆனால் கடைசி கட்டத்தில் அடிக்கப்பட்ட ரன்கள் எங்களது வாய்ப்பை கடினமாக்கி விட்டது.



பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும்.

பவுலர்களும் தங்கள் பந்து வீச்சில் மகிழ்ச்சி அடைந்து இருக்கமாட்டார்கள்.

பிரித்வி ஷா போன்ற வீரர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அவர் வெளிநாட்டில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.

அவர் அதிக ரன்கள் எடுப்பதற்கான வழியை கண்டுபிடித்து கொள்வார்.

பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ரஹானே தவிர யாரும் சரியாக செயல்படவில்லை.

பேட்டிங்கில் நல்ல ஸ்கோரை குவித்தால் தான் பந்து வீச்சாளர்களால் சவால் கொடுக்க முடியும்.

ரன் குவிப்பது நமது பலமாகும். ஆனால் இந்த போட்டியில் அது காணாமல் போய்விட்டது.

அதுவே தோல்விக்கு காரணமாகும்.



இந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது எங்களுக்கு தெரியும்.

ஆனால் இதனை மக்கள் பெரிய விஷயமாக நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நாங்கள் அப்படி எதுவும் நினைக்கவில்லை.

இந்த ஒரு தோல்வியால் இத்துடன் உலகம் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கலாம்.

நாங்கள் அப்படி எதுவும் நினைக்கவில்லை. எங்களை பொறுத்தமட்டில் ஒரு ஆட்டத்தில் தோற்று விட்டோம்.

அதனையே நினைத்து கொண்டு இருக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.

உள்ளூரில் விளையாடினாலும் சிறப்பாக ஆடினால் தான் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறோம்.

சர்வதேச போட்டியில் எதுவும் எளிதில் வந்து விடாது.

எதிரணியும் வெற்றி பெற வேண்டும் என்று தான் வருவார்கள்.

தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அது தான் நமது அணியின் குணாதிசயமாகும்.



வெளியில் இருந்து பேசுவதை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் மீண்டும் நமது அணி 7-8 இடத்துக்கு போக வேண்டியது தான் வரும்.

வெளியில் இருந்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பொருட்டல்ல.

ஒரு தோல்வி, ஒரு இரவில் அணியை மோசமானதாக ஆக்கிவிடாது. தோல்வி கண்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை.

விமர்சகர்கள் எங்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது நடக்காது.

ஒரு தோல்வியால் எங்களது தன்னம்பிக்கை சிதைந்து விடாது.

நாங்கள் நல்ல நிலையில் தான் இருக்கிறோம். வரும் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவோம்.



நான் நல்ல நிலையில் உள்ளேன். எனது பேட்டிங் நன்றாக தான் உள்ளது.

சில சமயங்களில் பேட்டிங்குக்கு தகுந்த மாதிரி ஸ்கோர் அமையாமல் போவது உண்டு.

அடுத்த போட்டியில் அணியின் வெற்றிக்கு நல்ல பங்களிப்பை அளிப்பேன் என்று விராட்கோலி கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker