TAMIL
‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்த முடியும்’ – இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நம்பிக்கை
சவுதம்டனில் நடந்த இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும் மழை புகுந்து கெடுத்து விட்டது.
தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இந்த டெஸ்டின் கடைசி நாளில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார்.
இது ஆண்டர்சனின் 600-வது (156 டெஸ்ட்) விக்கெட்டாகும். இதன் மூலம் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோருக்கு பிறகு 600 விக்கெட் மைல்கல்லை எட்டிய 4-வது பவுலர், வேகப்பந்து வீச்சாளர்களில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற சிறப்பை ஆண்டர்சன் பெற்றார்.
அவருக்கு பல வீரர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘600 விக்கெட் என்ற அற்புதமான சாதனை படைத்த ஆண்டர்சனுக்கு வாழ்த்துகள்.
நான் எதிர்கொண்ட சிறந்த பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர்’ என்றார். ‘600 விக்கெட் பட்டியலில் உங்களை வரவேற்கிறேன்.
ஒரு வேகப்பந்து வீச்சாளரிடம் இருந்து வெளிப்பட்ட மிகப்பெரிய முயற்சி இது’ என்று இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே பாராட்டியுள்ளார்.
தெண்டுல்கர், மெக்ராத் பாராட்டு
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் எப்படி பேட்டிங்கில் உச்சத்தை தொட்டாரோ அதே போல் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன்.
டெஸ்டில் தெண்டுல்கர் குவித்துள்ள ரன்களையோ (15,921 ரன்), அவர் பங்கேற்ற ஆட்டங்களின் எண்ணிக்கையையோ (200 டெஸ்ட்) யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது.
இதே போல் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன் உயரிய தரத்தை நிர்ணயித்து இருக்கிறார்.
ஆண்டர்சனுக்கு நிகரான திறமை என்னிடம் கிடையாது.
இரு புறமும் பந்தை கட்டுக்கோப்புடன் ஸ்விங் செய்வதில் அவரை மிஞ்ச முடியாது’ என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை அதிகமுறை அவுட் செய்தவர், ஆண்டர்சன். தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வியப்புக்குரிய சாதனை இது.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்றால் அது அவரது மனஉறுதி, விடா முயற்சி, துல்லியமான பந்து வீச்சுக்கு சான்று’ என்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘இந்த மைல்கல் தனித்துவமானது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் 156 டெஸ்டுகளில் ஆடுவது நினைத்து பார்க்க முடியாதது.
உங்கள் சாதனை, ஒவ்வொரு இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கும்’ என்றார்.
சாதனைக்கு பிறகு பேட்டி அளித்த 38 வயதான ஆண்டர்சன் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடம் சிறிது நேரம் விவாதித்தேன்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் போது (2021-22-ம் ஆண்டு ஆஷஸ் தொடர்) நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
அதில் என்னால் ஏன் விளையாட முடியாது? உடல்தகுதியை சீரியமுறையில் பராமரிக்கவும், ஆட்டத்திறனை மேம்படுத்தவும் கடினமாக உழைக்கிறேன்.
தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு அணித்தேர்வுக்கு தயாராக இருப்பேன்.
இங்கிலாந்து அணிக்கு இன்னும் என்னால் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து அணிக்காக எனது கடைசி டெஸ்ட் போட்டி வெற்றியை பெற்று விட்டதாக நினைக்கவில்லை.
என்னால் 700 விக்கெட் இலக்கை எட்ட முடியுமா? என்றால் ஏன் முடியாது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நாங்கள் நீடிக்கிறோம்.
எங்களுக்கு நிறைய டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.
அதுவே எனது ஆர்வமாக இருக்கிறது. இப்போதும் ஒவ்வொரு நாளும் பயிற்சியில் ஈடுபடுவதை விரும்புகிறேன்’ என்றார்.