TAMIL
கொல்கத்தாவில் இன்று நடக்கும் ஐ.பி.எல். ஏலத்தில் மேக்ஸ்வெல், லின், உத்தப்பா அதிக விலை போக வாய்ப்பு
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
வழக்கமாக ஐ.பி.எல். ஏலம் பெங்களூருவில் நடைபெறும். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் ஏலம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
மொத்தம் 8 அணிகளில் 73 இடங்கள் நிரப்ப வேண்டி உள்ளது. இதில் வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக 29 பேரை தேர்வு செய்யலாம்.
ஏலப்பட்டியலில் 186 இந்தியர்கள், 146 வெளிநாட்டவர் என்று மொத்தம் 332 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரே நாள் நடைபெறும் இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலப்பட்டியலில் 35 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் 31 வயதான கிளைன் மேக்ஸ்வெல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தீவிர கவனம் செலுத்தப்போவதாக கூறி 2019-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்காமல் விலகினார்.
அதற்கு முந்தைய ஏலத்தில் ரூ.9 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடியதால் மனஅழுத்தத்திற்கு உள்ளான மேக்ஸ்வெல் ஒன்றரை மாத ஓய்வுக்கு பிறகு சமீபத்தில் உள்ளூர் போட்டிக்கு திரும்பியுள்ளார்.
பேட்டிங் மட்டுமின்றி, சுழற்பந்தும் வீசக்கூடியவர் என்பதால் அவர் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.
அவரது தொடக்க விலை ரூ.2 கோடியாகும். கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் அணிகள் அவருக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.9.6 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி சூரர் கிறிஸ் லின் 12-வது ஐ.பி.எல். தொடரில் 13 ஆட்டங்களில் 405 ரன்கள் சேர்த்து இருந்தார்.
வாணவேடிக்கை காட்டுவதில் கில்லாடி என்றாலும் அவரது ஆட்டம் சீராக இல்லாததால் கொல்கத்தா அணி அவரை கழற்றி விட்டது. இதனால் கிறிஸ் லின் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார்.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் 30 பந்தில் 91 ரன், 33 பந்தில் 89 ரன்கள் என்று ரன்வேட்டை நடத்தி பிரமாதப்படுத்தினார்.
நல்ல பார்மில் இருப்பதால் அவரது விலை எகிறுவதற்கு வாய்ப்புள்ளது. இவரை ரூ.2 கோடியில் இருந்து ஏலம் கேட்க முடியும்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் 22 வயதான ஹெட்மயர் கடந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
5 இன்னிங்சில் வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்து சொப்பியதால் அவரை பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளவில்லை.
சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 85 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய ஹெட்மயரின் தொடக்க விலை ரூ.50 லட்சம் ஆகும்.
அவரை வாங்குவதற்கு அணிகள் ஆர்வம் காட்டலாம்.
கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய வீரர் ராபின் உத்தப்பா, இந்த ரஞ்சி சீசனில் தொடக்க ஆட்டத்திலேயே சதம் அடித்துள்ளார்.
34 வயதான உத்தப்பா விக்கெட் கீப்பராகவும் பணியாற்றக்கூடியவர். அதனால் அவரை வாங்குவதற்கு கணிசமான போட்டி இருக்கும்.
ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ள குறைந்த வயது வீரர் ஆப்கானிஸ்தானின் நூர் அகமது. 14 ஆண்டு 350 நாட்கள் நிரம்பிய இவர் ‘சைனாமேன்’ வகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய தொடரில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்த நூர் அகமதுவின் தொடக்க விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘நம்பர் ஒன்’ டெஸ்ட் பவுலர் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் கேரி, ஸ்டோனிஸ், தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ், டேவிட் மில்லர், இங்கிலாந்து வீரர்கள் மோர்கன், ஜாசன், சாம்குர்ரன், டாம் பான்டன், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர்கள் கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், வெஸ்ட் இண்டீசின் காட்ரெல் ஆகியோர் மீதும் கவனம் பதிந்துள்ளது.
மும்பை இளம் வீரர் 17 வயதான யஷாஸ்வி ஜெய்ஸ்வால், விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜார்கண்டுக்கு எதிராக 17 பவுண்டரி, 12 சிக்சருடன் 203 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியிலும் அங்கம் வகிக்கும் ஜெய்ஸ்வாலின் தொடக்க விலை ரூ.20 லட்சம் ஆகும்.
அவரது விலை பலமடங்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான (21 விக்கெட்) வேகப்பந்து வீச்சாளர் ஜி. பெரியசாமி, சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்கள் கைப்பற்றியவரான (20 விக்கெட்) சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் ஆகிய தமிழக வீரர்கள் ஐ.பி.எல்.-ல் கால்பதிக்க வாய்ப்புள்ளது.
ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க் மற்றும் பியுஷ் சாவ்லா, ஜெய்தேவ் உனட்கட், மொகித் ஷர்மா, அபிமன்யூ ஈஸ்வரன், யூசுப்பதான், ரோகித் கடாம், விராட் சிங், ராகுல் திரிபாதி உள்ளிட்டோரும் நல்ல விலை போவதற்கு வாய்ப்பு உள்ளது.
8 அணிகளின் நிர்வாகிகள் தங்கள் அணிக்கு எந்தெந்த வீரர்கள் தேவை? என்பதை இப்போதே கணக்கு போட்டு வைத்துள்ளனர்.
யார்-யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏலத்தில் செலவிட அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடி கையிருப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 வீரர்கள் தேவையாகும்.
அவர்களிடம் ரூ.14.60 கோடி இருப்பு உள்ளது.