CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இந்திய வீரர்கள் நாடு திரும்பினர் – நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றி கரமாக முடிந்தது.

3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இரு அணிகள் இடையே 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது. பிரிஸ்பேனில் நடந்த 4-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் முதல்முறையாக டெஸ்டில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள்.

வீரர்கள் தனித்தனியாக தங்களது சொந்த நகருக்கு சென்றடைந்தனர். அணியின் தற்காலிக கேப்டன் ரகானே, ரோகித்சர்மா, பிரித்விஷா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் மும்பை வந்தடைந்தனர்.

கடைசி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரி‌ஷப் பண்ட் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “கோப்பையை தக்க வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரை கைப்பற்றியதால் ஒட்டு மொத்த வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்” என்றார்.

ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார்.

29 வயதான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு இன்று வருகிறார்.

கடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார்.

சொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அவரது நண்பர்கள் கூறும்போது, “நடராஜனுக்கு மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் நிலையம் சந்தைப்பேட்டையில் இருந்து அவரது வீடு வரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

நாளையே (22-ந் தேதி) சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுவார் என்பதால் அவரை பார்த்து வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் இன்று மாலையே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்” என்றனர்.

நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டிகளில் சேர்த்து 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.

20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளரான நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் சென்னை வந்து கொரோனா தடுப்பு வளையத்துக்குள் வருவார்கள்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker