TAMIL
ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்: சீன நிறுவனம் விலக முடிவு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை சீன செல்போன் நிறுவனமான விவோ 5 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் 2017-ம் ஆண்டில் பெற்றது. இதன்படி ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனுக்கும் விளம்பர ஒப்பந்த தொகையாக ரூ.440 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விவோ வழங்குகிறது.
சமீபத்தில் லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு சீன ஸ்பான்சர்ஷிப்பை உதற வேண்டும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுத்தது.
ஆனாலும் விவோ உடனான ஒப்பந்தத்தை தொடர்வது என்று ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு முடிவு செய்தது. இந்த முடிவு சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ச்சியான எதிர்ப்பு எதிரொலியாக இந்த ஆண்டு மட்டும் ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக விவோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவன பிரதிநிதிகள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் இந்த ஆண்டுக்குரிய ஐ.பி.எல். போட்டிக்கான புதிய ஸ்பான்சரை குறுகிய காலத்தில் தேடிப்பிடிக்க வேண்டிய நெருக்கடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
விவோ ஸ்பான்சர்ஷிப்பின் மூலம் ஒவ்வொரு அணிகளும் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் பகிர்வு அடிப்படையில் ஆண்டுக்கு ஏறக்குறையை ரூ.20 கோடி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.