TAMIL
ஐ.பி.எல். போட்டிக்காக 20 ஓவர் உலக கோப்பையை தள்ளிவைக்கக்கூடாது ஆலன் பார்டர் கருத்து
கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி இந்தியாவில் தொடங்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதனை பயன்படுத்தி அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூர் (ஐ.பி.எல்.) போட்டியை விட உலக போட்டிக்கு தான் முன்னுரிமை (20 ஓவர் உலக கோப்பை) அளிக்கப்பட வேண்டும்.
எனவே 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால் ஐ.பி.எல். போட்டியும் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் நிச்சயம் கேள்வி எழுப்புவேன்.
இது பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயலாகும். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்படி கொடுக்காமல் ஐ.பி.எல். போட்டிக்கு முக்கியத்துவம் அளித்தால் அது தவறான முடிவாகும். அப்படி நடந்தால் தங்கள் நாட்டு வீரர்களை ஐ.பி.எல். போட்டிக்கு அனுப்புவதை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.