துபாயில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 19-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா 42(23) ரன்களும், ஷிகர் தவான் 32(28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 11(13) ரன்களில் கேட்ச் ஆனார்.
அவரைத்தொடர்ந்து ரிஷாப் பன்ட் மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடியில் ஸ்டோய்னிஸ் 24 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்து அசத்தினார்.
இந்த ஜோடியில் ரிஷாப் பன்ட் 37(25) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஸ்டோய்னிஸ் 53(26) ரன்களும், ஹெட்மயர் 11(7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 53 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், உதனா, மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் (4), பின்ச் (13) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் கோலி (43), வில்லியர்ஸ் (9), மொயின் அலி (11), வாஷிங்டன் சுந்தர் (17), துபே (11), உடானா (1) மற்றும் சிராஜ் (5) ரன்களில் ஆட்டமிழந்தனர். சைனி (12), சஹல் (0) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
இதனால் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.