TAMIL

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம்

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது தான் தலையில் அணிந்து ஆடிய தொப்பியை ஏலத்தில் விட்டார்.



வார்னேவின் தொப்பியை வாங்க ஆன்-லைன் மூலம் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர்.

இதனால் அவருடைய தொப்பி வரலாறு காணாத உச்ச விலைக்கு ஏலம் போனது. முடிவில் வார்னேவின் தொப்பியை ரசிகர் ஒருவர் ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்.

கிரிக்கெட் வீரர் ஒருவர் பயன்படுத்திய பொருள் ஏலம் விடப்பட்டதில் அதிக விலைக்கு போனதில் இதுவே சாதனை தொகையாகும்.

இதற்கு முன்பு 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியில் உபயோகப்படுத்திய தொப்பி ரூ.3 கோடிக்கு ஏலம் போனதே அதிக தொகையாக இருந்தது.



அதற்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2011-ம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றி தேடிக் கொடுத்த போது பயன்படுத்திய ‘பேட்’ அந்த ஆண்டில் விடப்பட்ட ஏலத்தில் ரூ.92 லட்சத்துக்கு விலை போனது.

டோனி மற்றும் பிராட்மேனின் பொருட்களை விட வார்னே பயன்படுத்திய தொப்பி அதிக விலைக்கு ஏலம் போய் வரலாறு படைத்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker