TAMIL

முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியிடம் இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது.



‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ டென்லி 87 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து தெம்பா பவுமா, கேப்டன் குயின்டான் டி காக்குடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர்.

15-வது சதம் அடித்த குயின்டான் டி காக் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஜோரூட் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

தெம்பா பவுமா 98 ரன்னில் கிறிஸ் ஜோர்டான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஆட்டம் இழந்தார்.



2-வது விக்கெட்டுக்கு குயின்டான் டி காக்-தெம்பா பவுமா ஜோடி 173 ரன்கள் சேர்த்தது.

47.4 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வான்டெர் துஸ்சென் 38 ரன்னுடனும், ஸ்முட்ஸ் 7 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நாளை நடக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker