IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
IPL2020 | அபுதாபியில் கோலாகலமாக தொடங்குகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா..

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. முதல் போட்டியிலே சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் சென்னை – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நடப்பாண்டு 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவான 13 வது ஐ.பி.எல். தொடர் அபுதாபியில் நாளை தொடங்குகிறது.
முதல் போட்டியிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் ஏக்கத்திற்கு தீணி போடும் விதமாக நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன, அபுதாபியில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி – ரோஹித் எதிரெதிரே விளையாடும் இந்த போட்டி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
கொரோனோ அச்சம் காரணமாக முதல் முறையாக ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் மட்டும் மைதானத்தில் களமாட காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தோனியை மைதானத்தில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு நாளை தரிசனம் தருகிறார் தல தோனி. இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சி.எஸ்.கே-வில் மட்டுமே தோனியை பார்க்க முடியும் என்பதால் இந்த ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. தல தரிசனம் என இணையத்திலும் டிரண்டாகி வருகிறது.
சி.எஸ்.கே அணியை பொருத்தவரை ரெய்னா, ஹர்பஜன் விலகலுக்கு பிறகு எழுந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் தனது அதிரடியான முடிவுகள் மூலம் விடைதர காத்திருக்கிறார் கேப்டன் தோனி. வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை சி.எஸ்.கே-வின் செல்லப்பிள்ளை பிராவோ, டு பிளஸிஸ், வாட்சன், இம்ரான் தாஹிர், லுங்கி நிகிடி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
மும்பை இண்டியன்ஸ் அணியை பொருத்தவரை ரோஹித் தலைமையில் நடப்பு சாம்பியன் என்ற கெத்துடன் களமிறங்குகின்றனர். பாண்டியா பிரதர்ஸ் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலிங்கா இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், ட்ரண்ட் பௌட், பும்ரா இருவரும் வேகத்தில் கலக்க காத்திருக்கின்றனர்.
மைதானத்திற்குள் வீரர்கள், நடுவர்களை தவிர யாருக்கும் அனுமதி கிடையாது. பந்தில் எச்சில் தடவக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் மத்தியில் கொரோனோ பரவல் மற்றும் அச்சத்தை போக்கும் விதமாக ஏழு நாட்களுக்கு ஒருமுறை அனைவருக்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.