TAMIL
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்தது.
இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
வங்காளதேச அணியினர் தங்கள் வெற்றியை மைதானத்தில் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள்.
அப்போது இந்திய அணியினரை நோக்கி தேவையற்ற சைகைகளை காட்டியதுடன், தகாத வார்த்தைகளையும் உதிர்த்தனர்.
போட்டியில் விக்கெட் வீழ்த்திய போதும் வங்காளதேச வீரர்கள் இதேபோல் இந்திய அணியினரை சீண்டி இருந்தனர்.
இதனால் போட்டி முடிந்ததும் மைதானத்தில் இரு அணியினரும் கைகலப்பில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது.
மைதான நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வெளியேற்றினார்கள்.
ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இதுபோல் வீரர்கள் இடையே மோதல் நடந்தது இதுவே முதல்முறையாகும்.
வங்காளதேச வீரர்கள் நடந்து கொண்ட விதத்துக்கு இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
நடந்த சம்பவத்துக்காக வங்காளதேச அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தம் தெரிவித்தார்.
வீரர்கள் மைதானத்தில் எல்லை மீறி நடந்து கொண்ட சம்பவம் குறித்து ஆடுகள நடுவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஜூனியர் உலக கோப்பை போட்டி நடுவர் கிரேமி லாப்ரூய் விசாரணை நடத்தினார்.
இதில் இந்திய அணி வீரர்கள் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய், வங்காளதேச அணி வீரர்கள் முகமது தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ரகிபுல் ஹசன் ஆகியோர் விதிமுறையை மீறி செயல்பட்டது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர்.
இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் ஆகாஷ்சிங்குக்கு 8 இடைநீக்க புள்ளியும், ரவி பிஷ்னோய்க்கு 7 தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதித்துள்ளது.
வங்காளதேச அணி வீரர்கள் முகமது தவ்ஹித் ஹிரிடாய்க்கு 10 இடைநீக்க புள்ளியும், ஷமிம் ஹூசைனுக்கு 8 இடைநீக்க புள்ளியும், ரகிபுல் ஹசனுக்கு 4 இடைநீக்க புள்ளியையும் தண்டனையாக விதித்து இருப்பதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இந்த தண்டனை புள்ளி அடுத்த 2 ஆண்டுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
இந்த தண்டனை புள்ளிகள் வீரர்கள் அடுத்து விளையாடும் சர்வதேச போட்டியின் போது அமல்படுத்தப்படும்.
ஒரு இடைநீக்க புள்ளியை அபராதமாக பெறும் வீரர் ஒருவர் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியிலோ அல்லது ஒரு 20 ஓவர் போட்டியிலோ அல்லது ஒரு 19 வயதுக்கு உட்பட்ட ஆட்டத்திலோ அல்லது ஒரு அதிகாரபூர்வ ‘ஏ’ அணி போட்டியிலோ பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.