TAMIL

ரோகித் சர்மாவின் வளர்ச்சிக்கு டோனியே காரணம் – கம்பீர் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தான். ஒட்டுமொத்தத்தில் அவரை சிறந்தவர் என்று சொல்ல முடியாது.

ஆனால் இப்போது சிறந்தவராக விளங்குகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், ஒரு உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் ரோகித் தான். விராட் கோலியையும், ரோகித் சர்மாவையும் ஒப்பிட்டு பார்ப்பது கடினம். விராட் கோலி நம்ப முடியாத ஒரு வீரர்.

அவரது சாதனைகளே அதற்கு சான்று.

ரோகித் சர்மா இந்த அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் முன்னாள் கேப்டன் டோனி தான்.

ஆரம்ப காலத்தில் ரோகித் சர்மா அணியில் இடம் பெறாத போது கூட அவரிடம் பேசி டோனி ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவரை ஒரு போதும் ஓரங்கட்டியது கிடையாது.

அந்த சமயத்தில் வேறு எந்த வீரருக்கும் இவ்வளவு ஆதரவு அவர் கொடுத்ததில்லை. இதே போல் விராட் கோலியையும் டோனி சரியாக பயன்படுத்தினார்.

இன்றைய தலைமுறையில், சுப்மான் கில், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்களும் திறமையானவர்களே.

டோனியின் பாணியில் அவர்களுக்கு கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஆதரவு அளிக்க வேண்டும். அதை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கம்பீர் கூறினார்.

நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முன்பே இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்பிளே 900 விக்கெட்டுகளும் (அவர் எடுத்துள்ள விக்கெட் 619), ஹர்பஜன்சிங் 700 விக்கெட்டுகளும் (அவர் எடுத்துள்ள விக்கெட் 417) கைப்பற்றி இருப்பார்கள் என்று மற்றொரு கேள்விக்கு கம்பீர் பதில் அளித்தார்.

இதற்கிடையே கம்பீர் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.

தனது கனவு டெஸ்ட் அணியில் கேப்டன் பொறுப்பை அனில் கும்பிளேயிடம் வழங்கியுள்ளார்.

கம்பீரின் இந்திய டெஸ்ட் அணி வருமாறு:சுனில் கவாஸ்கர், ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கபில்தேவ், டோனி, ஹர்பஜன்சிங், கும்பிளே (கேப்டன்), ஜாகீர்கான், ஸ்ரீநாத்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker