TAMIL
இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது – விராட் கோலி
தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
348 ரன்கள் இலக்கு வெற்றிக்கு போதுமானது என்று நாங்கள் நினைத்தோம். ராஸ் டெய்லர் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன். டாம் லாதமின் ஆட்டம் உத்வேகத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டது.
இந்த வெற்றியின் எல்லா பெருமையும் ராஸ் டெய்லர் மற்றும் லாதமையே சாரும். ஒரு கேட்ச் வாய்ப்பை நாங்கள் தவற விட்டோம். இருப்பினும் பீல்டிங்கில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம்.
எதிர்மறை விஷயங்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்தமாட்டோம்.
இந்த ஆட்டத்தில் எதிரணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர்.
அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். அறிமுக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர்.
இதனை அவர்கள் தொடர்ந்து அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் சதத்தை எட்டியது சிறப்பானதாகும்.
லோகேஷ் ராகுல் மீண்டும் நன்றாக விளையாடினார்.
இவை எங்களுக்கு நல்ல அறிகுறியாகும்’ என்று தெரிவித்தார்.
வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டாம் லாதம் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
தடுமாற்றத்தை சந்தித்தாலும் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் விரும்பியதை விட வெற்றி இலக்கு சற்று அதிகமானதாக தான் அமைந்தது.
நல்ல தொடக்கம் அமைந்ததாலும், விக்கெட் கைவசம் இருந்ததாலும் அதனை சமாளித்து விட்டோம்.
பொறுமையுடன் செயல்பட்டு பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை பலப்படுத்தியது நாங்கள் வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முக்கிய காரணமாகும். ராஸ் டெய்லர் ஆட்டம் அருமையாக இருந்தது.
அடுத்த ஆட்டத்தில் நாங்கள் இன்னும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்’ என்றார்.