TAMIL

‘இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த ஆண்டுகளில் 2019-ம் ஒன்று’ – கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி

கட்டாக்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 316 ரன்கள் இலக்கை இந்திய அணி 48.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கேப்டன் விராட் கோலி (85 ரன்), லோகேஷ் ராகுல் (77 ரன்), துணை கேப்டன் ரோகித் சர்மா (63 ரன்) அரைசதம் விளாசினர்.

ரவீந்திர ஜடேஜா (39 ரன்) கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.


இந்த ஆண்டில் மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) போட்டியையும் சேர்த்து இந்திய கேப்டன் விராட் கோலி 7 சதம் உள்பட 2,455 ரன்கள் சேர்த்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

ரோகித் சர்மா (2,442 ரன்) 2-வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி ஏற்கனவே 2016-ம் ஆண்டு (2,595 ரன்), 2017-ம் ஆண்டு (2,818 ரன்) 2018- ஆண்டுகளிலும் (2,735 ரன்) ரன் குவிப்பில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 ஆண்டு கள் அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் கோலி தான்.

கோலி கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த ஆண்டுகளில் 2019-ம் ஒன்று.

உலக கோப்பை கிரிக்கெட்டில் அந்த அரைமணி நேரத்தை தவிர்த்து (அரைஇறுதியில் நியூசிலாந்திடம் போராடி தோல்வி) மற்றபடி இது எங்களுக்கு மகத்தான ஆண்டு தான்.

நாங்கள் விளையாடிய விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. ஐ.சி.சி. கோப்பையை கைப்பற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்’ என்றார்.

மேலும் கோலி கூறும் போது, ‘இந்த ஆண்டு நமக்கு சிறப்பாக அமைந்ததற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்.



எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் உலகின் எந்த இடத்திலும் எதிரணியை ஆல்-அவுட் செய்ய முடியும்.

இந்தியாவில் நடந்த போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் கவனத்தை ஈர்த்தது மிகப்பெரிய சாதனையாகும்.

இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலும் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்ற உணர்வு எங்களிடம் இருக்கிறது’ என்றார்.

“ஜடேஜா இப்போது பேட்டிங்கில் நன்றாக ஆடுகிறார்.

அனேகமாக அவரது வாழ்க்கையில் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருப்பதாக கருதுகிறேன்.

இதே போல் பந்து வீச்சிலும் துல்லியத்தை காட்டுகிறார்.

பீல்டிங்கில் அவரது சாதுர்யம் குறித்து சொல்லத் தேவையில்லை.

ஆல்-ரவுண்டராக அசத்தும் அவரை முடிந்தஅளவுக்கு அதிகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்” என்றும் கோலி குறிப்பிட்டார்.

தொடர்நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்த ஆண்டு எனக்கு பெருமைப்படத்தக்க ஆண்டாக அமைந்திருக்கிறது.



உலக கோப்பையையும் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் ஒரு அணியாக இந்த வருடம் முழுவதும் சிவப்பு நிற பந்தோ அல்லது வெள்ளை பந்தோ அனைத்திலும் உண்மையிலேயே நன்றாக ஆடியுள்ளோம்.

தனிப்பட்ட முறையில், பேட்டிங்கில் அனுபவித்து விளையாடுகிறேன். அது, உற்சாகமிக்க போட்டித் தொடர்கள் கொண்ட 2020-ம் ஆண்டிலும் தொடரும்.

எனது ஆட்டத்திறனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பேட்டிங் செய்கிறேன்.

திட்டமிடலை களத்தில் சரியாக செயல்படுத்துவது மிகவும் முக்கியம்’ என்றார்.

இந்திய ஆல்-ரவுண்டர் ஜடேஜா கூறுகையில், ‘உலகில் யாருக்கும் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

எனக்கு நானே நிரூபிக்க வேண்டும் அவ்வளவு தான்.

இந்த ஆண்டில் நான் அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை.



வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க முயற்சிக்கிறேன்.

இந்த ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று கோலி விரும்பினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு முன்பே ஆட்டம் இழந்து விட்டார்.

‘அவசரப்பட்டு விடாதே, இயல்பாக விளையாடு’ என்று என்னிடம் கூறி விட்டு சென்றார். கடைசி பந்து வரை நின்றால் வெற்றி பெற்று விடலாம் என்பது தெரியும்.

அது தான் எங்களது திட்டம். அதன் அடிப்படையில் விளையாடினேன்’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு பெரிய ஏமாற்றம் எதுவும் இல்லை.

எங்களது வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் கொஞ்சம் சொதப்பி விட்டோம்.

உலகின் சிறந்த அணிகளில் ஒன்று என்பதை இந்தியா மீண்டும் களத்தில் நிரூபித்து காட்டி விட்டது.



ஹெட்மயர் சில இன்னிங்சில் அசத்தலாக ஆடினார். நிகோலஸ் பூரன் பந்தை அடித்து ஆடும் விதம் அருமை.

ஷாய் ஹோப் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ‘சல்யூட்’ நாயகன் காட்ரெல்லும் உள்ளார்.

இப்படி பல திறமையான வீரர்கள் எங்கள் அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

அவர்கள் எதிர்காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

இந்த தொடரில் 3 ஆட்டங்களில் முறையே 29, 75, 89 ரன்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் 24 வயதான நிகோலஸ் பூரன், கேப்டன் பொல்லார்ட்டுக்கு புகழாரம் சூட்டினார்.



பூரன் கூறுகையில், ‘பொல்லார்ட் என்னை தந்தை ஸ்தானத்தில் இருந்து வழிநடத்துகிறார்.

2015-ம் ஆண்டு விபத்தில் சிக்கி காலில் காயமடைந்த போது எனது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குரியானது.

ஆனால் நான் மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பியதற்கு பொல்லார்ட் தான் காரணம்.

என்னை ஊக்கப்படுத்தி, வாய்ப்பு வழங்கிய அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker