CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான யூனிஸ்கான் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தற்காலிகமாக பணியாற்றினார். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததை அடுத்து அவரை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நேற்று நியமனம் செய்துள்ளது. யூனிஸ்கான் 2022-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் கூறுகையில், ‘இங்கிலாந்து தொடரில் யூனிஸ்கானின் செயல்பாட்டின் தாக்கம் அருமையாக இருந்ததாக அணி நிர்வாகம் தரப்பில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய செயல் திட்டம், அர்ப்பணிப்பு, ஆட்ட அறிவு முதன்மையானதாகும். அவரது நியமனத்தின் மூலம் திறமையான பேட்ஸ்மேன்கள் பலரும் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் அணிக்கு போட்டிகள் இல்லாத சமயத்தில் யூனிஸ்கானின் திறமையை உள்ளூர் பேட்ஸ்மேன்களின் திறமையை வளர்க்க பயன்படுத்தி கொள்வோம். அதாவது போட்டிகள் இல்லாத நேரத்தில் கராச்சியில் உள்ள கிரிக்கெட் உயர் திறன் மையத்தில் முகமது யூசுப்புடன் இணைந்து அவர் பணியாற்றுவார்‘ என்றார்.
அடுத்த மாதம் தொடங்கும் நியூசிலாந்து தொடரில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் பணியை தொடங்க இருக்கும் யூனிஸ்கான் கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் நீண்ட நாள் அடிப்படையில் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை கவுரவமாக கருதுகிறேன். அடுத்து வரும் நியூசிலாந்து தொடரை எதிர்நோக்கி இருக்கிறேன். தேசிய அணியை தாண்டி உள்ளூர் திறமையை கண்டறிந்து வளர்க்கவும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூர் திறமையை மேம்படுத்துவதிலும் முழுமையான ஆர்வத்தை காட்டுவேன்‘ என்றார்.
42 வயதான யூனிஸ்கான் பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பாகிஸ்தான் பெண்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக டெஸ்ட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் ஒரு ஆண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.