TAMIL
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரசின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று தங்கள் அணி வீரர்களை அறிவுறுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
‘ஆஸ்திரேலிய வீரர்கள் (மொத்தம் 17 பேர்) ஐ.பி.எல். அணிகளுடன் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதனால் ஐ.பி.எல்.-ல் விளையாடுவதா, வேண்டாமா? என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
ஆனால் தற்போதைய சூழல் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம்’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றால் ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் ஒளிபரப்பு உரிமம், டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்டவை மூலம் ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் கோடியை இந்திய கிரிக்கெட் வாரியம் இழக்க நேரிடும்.