TAMIL

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்துள்ளார்.


வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2, 19 ரன் வீதம் எடுத்து சொதப்பியதால் 22 புள்ளிகளை பறிகொடுத்த அவர் 906 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதனால் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் தானாகவே ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறினார்.

சுமித் 8-வது முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பெற்றுள்ளார்.

டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரிப்பதில் நீண்ட காலமாக கோலி, சுமித் இடையே போட்டி நிலவி வருகிறது. ரன் குவிப்புக்கு ஏற்ப ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளனர்.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 8 நாட்கள் ‘நம்பர் ஒன்’ ஆக இருந்தார்.


அதன் பிறகு கோலி, சுமித் ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு யாரும் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்துக்கு வந்துள்ளார்.

இதே போல் வெலிங்டன் டெஸ்டில் 34, 58 ரன்கள் வீதம் எடுத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 2 இடம் ஏற்றம் கண்டு டாப்-10-க்குள் நுழைந்துள்ளார்.

அதே சமயம் இந்த டெஸ்டில் சரியாக ஆடாத (இரண்டு இன்னிங்சிலும் தலா 11 ரன்) இந்திய வீரர் புஜாரா 34 புள்ளிகளை தாரைவார்த்ததுடன், 2 இடம் சறுக்கி 9-வது இடத்துக்கு சென்றுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் 5 இடங்கள் அதிகரித்து 20-வது இடம் வகிக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை.

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.


இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 8 இடங்கள் எகிறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

2014-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அவரது சிறந்த தரநிலை இதுவாகும்.

2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை சாய்த்த மற்றொரு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 இடங்கள் உயர்ந்து 13-வது இடத்தை பாகிஸ்தானின் முகமது அப்பாசுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு பழைய பார்ம் இன்றி தவிக்கிறார்.

வெலிங்டன் டெஸ்டில் மொத்தம் 89 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.

இதனால் 6-வது இடத்தில் இருந்த அவர் 11-வது இடத்துக்கு பின்தங்கி யுள்ளார்.


38 புள்ளிகளை இழந்துள்ள அவர் தற்போது 756 புள்ளிகளுடன் இருக்கிறார்.

இந்திய பந்து வீச்சாளர்களில் டாப்-10 இடத்திற்குள் அஸ்வின் (9-வது இடம்) மட்டுமே அங்கம் வகிக்கிறார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டரும், 2-வது இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும், 3-வது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் நீடிக்கிறார்கள்.

இதுவரை 4-வது இடத்தில் இருந்த தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker