CRICKETLATEST UPDATESNEWSTAMIL

38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் கர்நாடகம் உள்பட 38 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன் லீக் ஆட்டங்கள் மும்பை, வதோதரா, இந்தூர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு ஆகிய 6 இடங்களில் அரங்கேறுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். அத்துடன் ‘எலைட்’ பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணிகளில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறுகிறது.

தமிழக அணி ‘எலைட் பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவினருக்கான லீக் ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. 10 மாத இடைவெளிக்கு பிறகு நடக்க இருக்கும் முதல் உள்ளூர் போட்டியான இது கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறுகிறது. அத்துடன் இந்த ஆண்டு இறுதியில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில் நடைபெறும் இந்த போட்டியில் வீரர்கள் செயல்படும் விதத்தை சேத்தன் ஷர்மா தலைமையிலான புதிய தேர்வு குழுவினர் கண்காணிக்க இருக்கிறார்கள். இதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு திரும்பவும், புதிதாக அணியில் இடம் பிடிக்கவும் வீரர்கள் தீவிரமாக முயற்சிப்பார்கள் என்பதால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத இஷாந்த் ஷர்மா, தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஒதுங்கிய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் புவனேஷ்வர்குமார், ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கியதால் 7 ஆண்டு தடையை அனுபவித்த 37 வயது வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் கடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இளம் படைகளான பிரியம் கார்க், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, இஷான் கிஷன், சர்ப்ராஸ் கான், சாய் கிஷோர், சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஆகியோரும் தங்கள் மாநில அணிகள் சார்பில் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.

தொடக்க நாளான இன்று கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட்டை சந்திக்கிறது. மற்ற ஆட்டங்களில் பெங்கால்-ஒடிசா, கர்நாடகா-ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்-உத்தரபிரதேசம், ரெயில்வே-திரிபுரா, குஜராத்-மராட்டியம், சத்தீஷ்கார்-இமாச்சலபிரதேசம், பரோடா-உத்தரகாண்ட், அசாம்-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அசாம்-ஐதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker