CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
20 ரன்கள் குறைவாக எடுத்ததால் தோல்வி- வீராட்கோலி பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு அபுதாபியில் நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை தோற்கடித்தது.
முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. படிக்கல் 74 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான டிகாக் 18 ரன்னிலும், இஷான்கிஷன் 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் சூர்ய குமார் யாதவ் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 43 பந்தில் 79 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
மும்பை அணி பெற்ற 8-வது வெற்றி (12 ஆட்டம்) இதுவாகும். இதன்மூலம் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பெங்களூர் அணி 5-வது தோல்வியை (12 ஆட்டம்) சந்தித்தது. அந்த அணி 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
தோல்வி குறித்து பெங்களூர் கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-
நாங்கள் அடித்த பந்துகள் பெரும்பாலும் பீல்டர்களிடமே சென்றது. அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களை 20 ரன்கள் குறைவாக எடுக்க வைத்து விட்டனர். அவர்களுக்கு நாங்கள் நல்ல நெருக்கடி கொடுத்து விளையாடினோம்.
ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகலாம் என்று நினைத்து தொடக்கத்திலேயே மோரீஸ், ஸ்டேயினை பந்து வீச வைத்தோம். அதன்பின் வாஷிங்டன் சுந்தரை பந்து வீச அழைத்தோம். இந்த போட்டி கடினமாக இருந்தது. ஆனால் அந்த கட்டத்தில் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றைய போட்டியில் 13-வது ஓவரின்போது சூர்ய குமார் அடித்த ஒரு பந்தை பீல்டிங் செய்த வீராட்கோலி அவரை நோக்கி முறைத்த படியே வந்தார்.
அப்போது சூர்யகுமார் யாதவும் கோலியை பார்த்தபடியே நின்றார். அவர் அருகில் நின்ற கோலி பந்தை தேய்த்த படி நின்றார். ஆனால் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.