TAMIL
20 ஓவர் கிரிக்கெட்: தூத்துக்குடி அணியை சுருட்டியது திருவள்ளூர்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதில் தேனியில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் திருவள்ளூர்-தூத்துக்குடி மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ராம் அரவிந்த் 49 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் ஆடிய தூத்துக்குடி அணி 15.1 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது. இதனால் திருவள்ளூர் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.
தூத்துக்குடி வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியும் அது அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.
திண்டுக்கல்லில் நடந்த ஆட்டம் ஒன்றில் காஞ்சீபுரம்-புதுக்கோட்டை அணிகள் சந்தித்தன.
முதலில் பேட்டிங் செய்த காஞ்சீபுரம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
பிரனவ் குமார் 56 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய புதுக்கோட்டை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்தது. இதனால் காஞ்சீபுரம் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்ற ஆட்டங்களில் பெரம்பலூர், தஞ்சாவூர், வேலூர், ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், திருச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மதுரை அணிகள் வெற்றி பெற்றன.