TAMIL

பெண்கள் 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இந்தியா பதிலடி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.



‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17 ரன்களுக்குள் 2 தொடக்க வீராங்கனைகளை (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0, பிரியா பூனியா 5 ரன்) இழந்தாலும், அடுத்து களம் கண்ட பூனம் ராவுத் (77 ரன்கள்), கேப்டன் மிதாலி ராஜ் (40 ரன்கள்), ஹர்மன்பிரீத் கவுர் (46 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. தானியா பாட்டியா 9 ரன்னுடனும், ஜூலன் கோஸ்வாமி ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் அலியா, அபி பிளட்செர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 47.2 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 138 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிமைன் கேம்ப்பெல் 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி வீராங்கனை பூனம் ராவுத் ஆட்டநாயகி விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker