TAMIL
20 ஓவர் உலக கோப்பைக்கு தயாராக ஒருநாள் தொடர் சரியானதாகாது – விராட்கோலி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஹாமில்டனில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த ஆட்டத்தில் மயங்க் அகர்வாலுடன் இணைந்து பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்.
லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதுடன் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடுவார். ரோகித் சர்மா இந்த போட்டி தொடரில் இருந்து விலகியது எதிர்பாராததாகும்.
20 ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியாக இருக்கட்டும் ரோகித் சர்மாவின் பெயர் தான் பட்டியலில் முதலிடம் வகிக்கும். தற்போது ஒருநாள் போட்டி தொடர்கள் அவ்வளவாக இல்லை.
கேன் வில்லியம்சன் ஆட முடியாமல் போனது ஆச்சரியம் அளிக்கிறது.
ஏனெனில் காயம் சற்று சரியாகி விட்டது என்று தான் கூறினார். தோள்பட்டை மூட்டு பிரச்சினை சாதாரணமானது அல்ல.
அதனுடன் விளையாடுவது என்பது முடியாத காரியம். ரோகித் சர்மா காயம் துரதிருஷ்டவசமானது.
அந்த வாய்ப்பில் விளையாட வருபவர்களுக்கு நெருக்கடி இருக்க தான் செய்யும். அந்த வாய்ப்பை பெறும் வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராக இந்த ஒருநாள் போட்டி தொடர் சரியானதாக இருக்காது.
20 ஓவர் போட்டி மிகவும் வித்தியாசமானதாகும். வரும் ஐ.பி.எல். போட்டி தொடர் உலக கோப்பை போட்டிக்கு தயாராக நல்ல அடித்தளமாகும்.
அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிக்கு தயாராக எங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒவ்வொரு வடிவிலான போட்டிக்கும் தகுந்த மாதிரி விளையாட வேண்டியது அவசியமானதாகும்.
பீல்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டாம் லாதம் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டி எங்களுக்கு நல்ல அனுபவமாகும்.
அதில் நாங்கள் சரியாக செயல்படவில்லை.
ஆனால் அந்த ஆட்டம் நம்பமுடியாததாகும்.
முந்தைய தோல்வியை மறந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் நாங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.
20 ஓவர் போட்டி தொடர் தோல்வி எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
ஒருநாள் போட்டியில் புதிய வீரர்கள் பலர் இணைந்து இருக்கிறார்கள். இது புதிய போட்டி தொடராகும். கேன் வில்லியம்சன் ஆடாதது இழப்பாகும்.
ரோகித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்.
இந்திய அணியை எளிதாக எடுத்து கொள்ளமாட்டோம். இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம்’ என்றார்.