TAMIL

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மொகாலியில் இன்று மோதல்

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.



இந்த நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த தொடரை அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னோட்டமாக கருதும் இந்திய கேப்டன் விராட் கோலி, அதை மனதில் கொண்டே அணித்தேர்வு இருக்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ரிஷாப் பண்ட், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர் போன்ற இளம் வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அவ்வப்போது சொதப்புகிறார். ஒரே மாதிரியான தவறுகளை திரும்ப திரும்ப செய்தால் சிக்கலாகி விடும் என்பதை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெளிவுப்படுத்தியிருக்கிறார். இதனால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் ரிஷாப் பண்ட் எச்சரிக்கையாக ஆட வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையை வலுப்படுத்த மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர் ஆயத்தமாக உள்ளனர்.

இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இளம் வீரர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் அணி நிர்வாகம் கேட்பது, தெளிவான திட்டமிடலுடன் அச்சமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதைத் தான். அதே நேரத்தில் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது.

ரிஷாப் பண்டை பொறுத்தவரை அவர் தனது இயல்பான ஷாட்டுகளை அடித்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திறமையான ஒரு வீரர் அவர். அதே சமயம் விக்கெட்டை மெத்தமான இழந்து விடக்கூடாது. ஆட்டத்தில் பயமின்மைக்கும், கவனமின்மைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஸ்ரேயாஸ் அய்யரும், மனிஷ் பாண்டேவும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி உள்ளனர். அதே போல் அவர்கள் அசத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக தற்போதைய 20 ஓவர் அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள். கடந்த காலங்களில் நாங்கள் 20 ஓவர் போட்டிகளை தீவிரமாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் இப்போது உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறோம்.’ என்றார்.

இளம் வீரர்களை கொண்ட தென்ஆப்பிரிக்க அணி வெற்றியுடன் தொடரை தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. புதிய கேப்டன் குயின்டான் டி காக், டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் அதிகமாக நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் புயல்வேக பவுலர் காஜிசோ ரபடா குடைச்சல் கொடுப்பார்.

கேப்டன் குயின்டான் டி காக் நிருபர்களிடம் கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கேப்டன் பதவி குறித்து நான் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது இன்னொரு படிக்கட்டு, அதாவது கொஞ்சம் கூடுதல் பொறுப்பு அவ்வளவு தான். கேப்டன்ஷிப் எனது ஆட்டத்திறனை பாதிக்குமா? இல்லையா? என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியாது. கேப்டன் பதவி எனக்கு மேலும் உத்வேகத்தை தரும் என்று நம்புகிறேன்’ என்றார்.

டி காக் மேலும் கூறுகையில், ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை ஐ.பி.எல். கோப்பையை (மும்பை இந்தியன்ஸ் அணிக்காக) வென்றது தான். நாங்கள் உலக கோப்பையை வென்றிருந்தால் அதை மெகா சாதனையாக சொல்லி இருப்பேன். அது இல்லாததால் ஐ.பி.எல். வெற்றி தான் இப்போதைக்கு எனக்கு மெச்சத்தக்க சாதனை’ என்றார்.

இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இடையிலான நீயா-நானா? மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து டி காக்கிடம் கேட்ட போது, ‘இருவருமே சிறந்த வீரர்கள். தங்களது வழியில் நேர்மறை எண்ணத்துடன் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர்கள். அவர்கள் இடையே இது நல்ல மோதலாக இருக்கும். அது ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும்’ என்று குறிப்பிட்டார்.

போட்டி நடக்கும் மொகாலி பேட்டிங்குக்கு சாதகமான மைதானமாகும். இங்கு இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் (இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா குவித்த 211 ரன்களே ஓர் அணியின் அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்திலும் ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம். வானிலையை பொறுத்தவரை லேசான மழை குறுக்கிட பெய்ய வாய்ப்புள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக் (கேப்டன்), ரீஜா ஹென்ரிக்ஸ், பவுமா, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, வெய்ன் பிரிட்டோரியஸ், ஜோர்ன் போர்ச்சுன் அல்லது ஜார்ஜ் லின்ட், காஜிசோ ரபடா, ஜூனியர் தலா அல்லது அன்ரிச் நார்ஜே தப்ரைஸ் ஷம்சி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்துவார்’- ரதோர்

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நேற்று அளித்த பேட்டியில், ‘குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா அற்புதமான தொடக்க ஆட்டக்காரர். போதுமான வாய்ப்பு அளிக்கும்போது அவரால் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு தொடக்க ஆட்டக்காரராக ஜொலிக்க முடியாது. தனது திட்டமிடலை களத்தில் சரியாக செயல்படுத்தினால் அணியின் மிகப்பெரிய சொத்தாக அவர் இருப்பார்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker