பஞ்சாப், மும்பை அணிகள் தலா ஒரு வெற்றி, 2 தோல்வி என்று இதுவரை 2 புள்ளி மட்டுமே பெற்றுள்ளன. பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் சூப்பர் பார்மில் உள்ளனர்.
இருவரும் நடப்பு தொடரில் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தும் காட்ரெலின் ஒரே ஓவரில் 5 சிக்சர் தாரைவார்ப்பால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் பஞ்சாப் வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர். முதல் 3 ஆட்டங்களிலும் வெளியில் உட்கார வைக்கப்பட்ட ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.
இருப்பினும் கடைசி 5 ஓவர்களில் 89 ரன்கள் திரட்டி சிலிர்க்க வைத்தனர். அதே அதிரடி ஜாலத்தை இந்த ஆட்டத்திலும் தொடருவார்களா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
‘பஞ்சாப் கேப்டன் ராகுல் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு நெருக்கடி கொடுத்து விரைவில் வீழ்த்த வேண்டியது முக்கியம். இதற்காக சில திட்டங்கள் வகுத்துள்ளோம்.
அந்த அணியை கட்டுப்படுத்தும் அளவுக்கு திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் எங்கள் அணியில் உள்ளனர்’ என்று மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் நேற்று தெரிவித்தார்.