TAMIL

வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு: பரோடா அணியின் பயிற்சியாளர் அதுல் இடைநீக்கம்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான அதுல் பீடாட், குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்பட்டு வந்தார்.

கடந்த மாதம் இமாச்சலபிரதேசத்தில் நடந்த பெண்கள் சீனியர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பரோடா அணி பங்கேற்ற போது, சில



வீராங்கனைகளுக்கு அவர் செக்ஸ் தொல்லை தொடுத்ததாகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அதுல் பீடாட் நேற்று முன்தினம் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரோடா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் என்று அச்சங்கத்தின் செயலாளர் அஜித் லீலே தெரிவித்தார்.

ஆனால் கொரோனா அச்சத்தால் அனைத்து விதமான கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி எப்போது அமைக்கப்படும் என்பது தெரியவில்லை.



மும்பையைச் சேர்ந்த 53 வயதான அதுல் பீடாட் 1994-ம் ஆண்டில் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

முகமது அசாருதீன் தலைமையில் தெண்டுல்கர், அஜய் ஜடேஜா, நவ்ஜோத் சித்து உள்ளிட்டோருடன் இணைந்து ஆடியுள்ள அவர் 13 ஆட்டங்களில் ஒரு அரைசதம் உள்பட 158 ரன்கள் சேர்த்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அதுல் பீடாட் கூறுகையில், ‘வீராங்கனைகள் என் மீது கூறிய புகார் ஆச்சரியம் அளிக்கிறது. இவை எல்லாம் அடிப்படை ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகள் ஆகும்.

என் தரப்பு விளக்கத்தை விரைவில் வெளியிடுவேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker