TAMIL
விராட் கோலி, சுமித் போன்று மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ரன் குவிக்க விரும்புகிறேன் – ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் பேட்டி
மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இ்ந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் ரன்குவிக்கும் எந்திரமாக உருவெடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன், இந்திய தொடரின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.
14 டெஸ்டுகளில் 4 சதம், 8 அரைசதம் உள்பட 1,459 ரன்கள் சேர்த்து வியக்க வைத்துள்ள லபுஸ்சேன், தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
இதே போல் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அவர் அசத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் நம்புகிறது.
25 வயதான லபுஸ்சேன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸ்டீவன் சுமித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் விளையாடுவதை உன்னிப்பாக கவனிக்கிறேன்.
அவர்கள் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.
குறிப்பாக 5-6 ஆண்டுகள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
ஒரு வடிவில் மட்டுமல்ல, 2 அல்லது மூன்று வடிவிலான போட்டிகளில் அவர்களது பேட்டிங் பிரமாதமாக உள்ளது.
இது எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது.
அவர்களை போன்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் நீண்ட காலம் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது லட்சியமாகும்.
இந்த கோடை காலத்தில் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகள் எனக்கு வெற்றிகரமாக அமைந்தது.
ஆனால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பது தான் உண்மையான சவாலாகும்.
இந்திய ஒரு நாள் தொடரை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன்.
உள்ளூர் சூழலில் இந்தியாவை எதிர்கொள்வது கடினமானது. அவர்கள் மிகவும் வலுவான அணியாக இருக்கிறார்கள்.
எனவே சவாலை ஏற்றுக் கொண்டு அனுபவித்து விளையாட வேண்டியது முக்கியமாகும்.
மற்றபடி அதிகம் யோசிக்காமல் ஒவ்வொரு பந்தாக கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆடுவேன்.
இந்தியாவில் ஆடுவது என்றால் சுழற்பந்து வீச்சை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்பது தான் முக்கிய அம்சமாக இருக்கும்.
என்னை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சை எப்படி சந்திப்பது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
இந்திய தொடரில் நான் எந்த வரிசையில் களம் காண வாய்ப்பு கிடைத்தாலும் அதில் சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்ட முயற்சிப்பேன்.
மிடில் வரிசையில் இறங்கி பேட்டிங் செய்யும் போது, வேகமாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும்.
நிலைத்து நின்று விட்டால் அதன் பிறகு கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டும்.
இந்திய தொடருக்கு எல்லா வகையிலும் தயாராக இருக்கிறேன்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி, வெவ்வேறு விதமான சூழலிலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடியவர்.
ஒரு நாள் கிரிக்கெட்டை அவர் தொடங்கும் விதம், நிறைவு செய்யும் விதம் ஆகியவற்றை எனக்குள் உள்வாங்கிக் கொண்டு விளையாட விரும்புகிறன். அதே நேரத்தில் என்னை அவருடன் ஒப்பிடமாட்டேன்.
இவ்வாறு லபுஸ்சேன் கூறினார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, நாளுக்கு நாள் நிறைய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்கிறார்கள். அவரது பந்து வீச்சை நீங்கள் அதிகமாக எதிர்கொள்ளும் போது அவர் எந்த மாதிரி பந்து வீசுகிறார் என்பதை புரிந்து கொள்ள தொடங்கி விடுவீர்கள்.
எனவே அவரது பந்து வீச்சு குறித்து பெரிதாக கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர் அற்புதமான ஒரு பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை.
அவரது பந்து வீச்சை எதிர்த்து ஆடாத போது அவரது பவுலிங்கை ரசிக்கலாம்.
வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் அதே சமயம் திட்டத்தை சரியாக செயல்படுத்துவதிலும் கலக்குகிறார்.
ஒரு பேட்டிங் குழுவாக எப்படி விளையாடப்போகிறோம் என்பதில் தான் தற்போது கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதமான பலம், பலவீனம் உண்டு. எனவே இந்தியாவுக்கு எதிரான சவாலை சமாளிக்க மனதளவில் தயாராக இருப்பது முக்கியம்.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்பு துரதிர்ஷ்டவசமானது. பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரம் மீள வேண்டும் என்பதில் தான் எங்களது எண்ணஓட்டம் உள்ளது.
தற்போதைய பாதிப்புடன் ஒப்பிடும் போது கிரிக்கெட் ஒன்றும் பெரிது கிடையாது.
ஆனால் கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள், களத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தி கடினமான தருணத்தில் உள்ள அவர்களது முகத்தில் கொஞ்சமாவது சிரிப்பை கொண்டு வர முயற்சிப்போம்.
இவ்வாறு பிஞ்ச் கூறினார்.