TAMIL
விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுக்க விரும்புகிறேன் – பிரித்வி ஷா பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் மும்பையைச் சேர்ந்த 20 வயதான பிரித்வி ஷா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
நீண்ட இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பினேன்.
எல்லாமே நல்ல விதமாக அமைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் உத்வேகம் தகர்ந்து விட்டது.
ஆனால் தற்போதைய கடினமான காலக்கட்டத்தில் தேசத்தின் நலனே முக்கியம்.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். விரைவில் இந்த நிலைமை சரியாகும் என்று நம்புகிறேன்.
இந்த பிரச்சினை வந்திருக்காவிட்டால், இந்த நேரம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பேன். உண்மையிலேயே கிரிக்கெட்டை தவறவிடுகிறேன். கிரிக்கெட், நமது கலாசாரத்தில் ஒன்றாகி விட்டது.
இருப்பினும் இப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து மீள்வதில் தான் தீவிரம் காட்ட வேண்டும்.
தொடர்ந்து உடல்தகுதியுடன் இருப்பதற்காக வீட்டில் இருந்தபடியே வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன்.
எனது முந்தைய ஆட்டங்களின் வீடியோக்களை பார்த்து ஆராய்ந்து, அதில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற்றம் காண்பதற்கு இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.
19 வயதுக்குபட்டோருக்கான உலக கோப்பையை வென்றது, அறிமுக டெஸ்டிலேயே சதம் விளாசியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.
அதே போல் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது (8 மாத தடை விதிக்கப்பட்டது), கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டது மோசமான தருணமாகும்.
ஒரு விளையாட்டு வீரராக எந்த மருந்தை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிறிய மருந்து என்றாலும் உங்களது டாக்டர் அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய டாக்டர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே உட்கொள்ள வேண்டும்.
எந்த மருந்து என்றாலும் அது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் இருக்கிறதா என்பதை முன்னெச்சரிக்கையாக டாக்டர்களிடம் கேட்பதே நல்லது.
எனது விவகாரத்தை பாருங்கள். இருமல் குணமாவதற்கு மருந்து சாப்பிட்டேன். அந்த மருந்து தடை செய்யப்பட்ட மருந்து பட்டியலில் இருந்தது தெரியாததால் பிரச்சினையில் சிக்கினேன்.
அந்த தவறில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது, சாதாரண மருந்து என்றாலும் கூட கிரிக்கெட் வாரிய டாக்டர்களிடம் ஆலோசித்த பிறகு சாப்பிடுகிறேன்.
கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த அந்த காலக்கட்டம் மிகவும் கடினமானது.
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். இது போன்று வேறு எந்த வீரருக்கும் நடக்கக்கூடாது.
எப்போதும் எல்லோரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது என்பது நான் கற்றுக்கொண்ட பாடம்.
ஆட்டம் மீதான விமர்சனங்கள் விளையாட்டின் ஒரு அங்கம்.
விமர்சனங்கனை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டு ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
2019-ம் ஆண்டு எனக்கு நன்றாக அமையவில்லை.
ஆனாலும் ஒரு சில ஆறுதலான விஷயங்களும் நடந்தன.
எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் பேட் மூலம் பதிலடி கொடுக்க விரும்புகிறேன். இவ்வாறு பிரித்வி ஷா கூறினார்.