ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 179 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதில் தன்வசப்படுத்தியது.
ஷேன் வாட்சன் (53 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 83 ரன்கள்), பாப் டுபிளிஸ்சிஸ் (53 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 87 ரன்கள்) ஜோடி ஆட்டம் இழக்காமல் தொடக்க விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. தொடக்க விக்கெட்டுக்கு சென்னை அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும். முதல் 4 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார்.
வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ‘சிறிய விஷயங்களை நாங்கள் சரியாக செய்தோம் என்று நினைக்கிறேன். அது தான் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. எங்களுக்கு என்ன தேவையானதாக இருந்ததோ? அந்த மாதிரியான தொடக்கத்தை நாங்கள் பேட்டிங்கில் பெற்றோம். இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை அடுத்து வரும் போட்டிகளிலும் எங்களால் பிரதிபலிக்க முடியும் என்று நம்புகிறோம். எங்கள் அணியின் நிலையான வீரர் தேர்வுக்கான பாராட்டுகள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கையே சாரும். நல்ல விஷயம் என்னவென்றால் எங்களிடம் ஒரே திட்டம் உள்ளது. அதற்காக விவாதம் இல்லை என்று சொல்ல முடியாது.
ஆனால் ஒரே திட்டம் தான் எங்களுக்குரிய உறவுக்கு காரணமாகும். கடந்த 3 ஆட்டங்களில் சந்தித்த தோல்வியை பார்க்கையில் எதிரணியின் ரன்னை கட்டுப்படுத்தி கூடுதல் நெருக்கடி அளிக்க தவறி விட்டோம் என்று கருதுகிறேன். ஒவ்வொரு அணியிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் உள்ளனர். அவர்களால் எதிரணியின் பந்து வீச்சு திட்டத்தை தகர்க்க முடியும். ஷேன் வாட்சன் வலைப்பயிற்சியில் நன்றாக அடித்து ஆடினார். அதனை களத்திலும் செய்ய வேண்டியது அவசியமானதாகும். அதற்கு சற்று காலம் பிடித்து இருக்கிறது. பிளிஸ்சில் எங்களுக்கு நங்கூரம் போன்றவர். ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை அடித்து ஆடக்கூடியவர். அத்துடன் அவர் தனது வித்தியாசமான ஷாட்களால் எதிரணி பவுலர்களை குழப்பி விடுவார். சரியான ஷாட்களை வாட்சன், பிளிஸ்சிஸ் ஆகியோர் ஆடி எங்களுக்கு தேவையாக இருந்த உத்வேகத்தை அளித்தார்கள்’ என்றார்.