TAMIL
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியா வந்தது
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் வருகிற 3-ந்தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மக்முதுல்லா ரியாத் தலைமையிலான 15 பேர் கொண்ட வங்காளதேச அணி வீரர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர். வங்காளதேச 20 ஓவர் அணியின் கேப்டன் மக்முதுல்லா ரியாத் கூறுகையில், ‘தேசத்திற்காக முழு மூச்சுடன் நாங்கள் விளையாட வேண்டும். ஷகிப் அல்-ஹசன் இல்லாததை பின்னடைவாக நினைக்காமல், இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் உழைப்போம். தேசிய அணிக்காக விளையாடுவதை விட பெரிது எதுவும் கிடையாது. கேப்டன் பொறுப்பில் எல்லா வகையிலும் எனது சிறந்த பங்களிப்பை அளிக்க முயற்சிப்பேன். இந்தியாவுக்கு எதிரான தொடர் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம்’ என்றார்.
மற்றொரு மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹிம் தனது டுவிட்டர் பதிவில் ‘ஷகிப் அல்-ஹசனை தவற விடுவது நிச்சயம் இழப்பு தான். அவரும், நானும் நீண்ட காலம் இணைந்து விளையாடி இருக்கிறோம். அவர் இல்லாத களத்தில் நான் எப்படி விளையாடப்போகிறேன் என்பதை நினைத்து பார்ப்பது கூட வேதனையாக இருக்கிறது. விரைவில் சாம்பியன் வீரராக திரும்பி வருவார் என்று நம்புகிறேன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் ஆதரவும் அவருக்கு உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.